கவிஞர் வைரமுத்து பிறந்தநாள் விழா, ஆரூர் தமிழ்நாடனுக்கு விருது வழங்கப்பட்டது
கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை வெற்றித் தமிழர் பேரவை ஆண்டுதோறும் கவிஞர்கள் திருநாளாகக் கொண்டாடி வருகிறது.
இந்த ஆண்டு கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாள் ஜூலை 13 வியாழக்கிழமை காலை 9 மணிக்குச் சென்னை கோடம்பாக்கம் டிரஸ்ட்புரத்தில் உள்ள பொன்மணி மாளிகை திருமண மண்டபத்தில் கொண்டாடப்பட்டது. ஒன்றிய முன்னாள் அமைச்சர் ஜெகத்ரட்சகன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் கம்பம் பெ.செல்வேந்திரன் இருவரும் வாழ்த்துரை வழங்கினார்கள்.
வெற்றித் தமிழர் பேரவை ஒவ்வோராண்டும் கவிஞர் வைரமுத்துவின் பிறந்தநாளை முன்னிட்டு ஒரு கவிஞரைத் தேர்வு செய்து கவிஞர்கள் திருநாள் விருது வழங்கி வருகிறது. இந்த ஆண்டு கவிஞர்கள் திருநாள் விருதை கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் பெற்றார்.
அவருக்குக் கவிஞர் வைரமுத்து விருது வழங்கினார். கவிஞர் வைரமுத்து கல்வி அறக்கட்டளை வழங்கும் இந்த விருது ரூ.25,000 ரொக்கம், பாராட்டுப் பட்டயம் மற்றும் சால்வை கொண்டதாகும்.
இதுவரை கவிஞர்கள் திருநாள் விருதினை சுரதா, சிற்பி பாலசுப்பிரமணியன், ஈரோடு தமிழன்பன், நா.காமராசன், வா.மு.சேதுராமன், கே.சி.எஸ்.அருணாசலம், முகவை ராஜமாணிக்கம், முத்துலிங்கம், பூவை செங்குட்டுவன், காசிஆனந்தன், இன்குலாப், இந்திரன், கல்யாண்ஜி, விக்கிரமாதித்யன், தமிழச்சிதங்கபாண்டியன், கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன், ஆண்டாள்பிரியதர்சினி, இளையபாரதி, சல்மா, அ.வெண்ணிலா, இளம்பிறை, தாராகணேசன், சக்திஜோதி உள்ளிட்ட பல கவிஞர்கள் பெற்றிருக்கிறார்கள்.
விழாவின் தொடக்கமாக ஆலாப் ராஜூ - வர்ஷா இசைக் குழுவினர் கவிஞர் வைரமுத்துவின் தமிழிசைப் பாடல்களைப் பாடினார்கள்.
விழா ஏற்பாடுகளை சென்னை மாவட்ட வெற்றித் தமிழர் பேரவையின் சார்பில் வி.பி.குமார், வெங்கடேஷ், தமிழரசு, காதர்மைதீன், செல்லத்துரை, சண்முகம், ராஜசேகர், நாசர், மாந்துறைஜெயராமன், தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.
மலேசியா ராஜேந்திரன், சுவிட்சர்லாந்து சதீஷ் உள்ளிட்ட பலர் இந்த விழாவில் கலந்து கொண்டனர்
0 comments:
Post a Comment