மீண்டும் இணையத்தில் ட்ரெண்டிங்கான ஷாருக்கான்
'பாலிவுட் பாட்ஷா' ஷாருக்கான் இந்தி திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கிறது. இதனை கொண்டாடும் வகையில் அவர் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களுடன் உரையாடினார். இதில் தன்னுடைய திரையுலக அனுபவங்கள் குறித்தும், 'ஜவான்' பட அப்டேட் குறித்தும் சுவராசியமான பல விசயங்களை பகிர்ந்து கொண்டார்.
ஷாருக்கான் பரபரப்பான... பிரபலமான.. நட்சத்திர நடிகராக திகழ்ந்தாலும் மாதந்தோறும் #AskSRK என்ற பிரத்யேகமான நிகழ்வு மூலம் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களிடம் உரையாடுவது வழக்கம். இதன் போது அவர் வெளிப்படுத்தும் எண்ணங்கள், கேள்விகளுக்கு அளிக்கும் பதில்கள் எப்போதும் அனைவரது கவனத்தையும் கவரும். இந்நிலையில் அவர் திரையுலகில் அறிமுகமாகி 31 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு ரசிகர்களுடனான இணையதள உரையாடல் சுவாரசியமாகவும், உணர்வுபூர்வமாகவும் நடைபெற்றது. வழக்கம்போல் இந்த முறையும் அவர் பேசிய பேச்சுக்கள் மற்றும் அளித்த பதில்கள் அவருடைய மேதமை தன்மையை வெளிப்படுத்தி வியப்படைய வைத்தது. மேலும் 'ஜவான்' படத்தின் சில ரகசியங்களை குறிப்பிட்டு படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பையும் அதிகரிக்க வைத்திருக்கிறார். திரையுலக பயணம் குறித்தும் பல விசயங்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார்.
31வருட திரையுலக பயணம் குறித்து ஷாருக்கான் பேசுகையில், '' நான் இன்று வரை தொடர்ந்து கடைபிடித்து வரும் விசயம் இதுதான். நான் ஏற்று நடித்த ஒவ்வொரு கதாபாத்திரத்தின் முழு பின்னணியும், அதன் சித்தாந்தத்தையும் எழுத வேண்டும் என விரும்புகிறேன். சில தருணங்களில் அதனை இயக்குநர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். சில தருணங்களில் எனக்குள் தோன்றிய விசயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் எனக்குள்ளேயே வைத்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு கவிதையாகவோ அல்லது முழு கதையாக கூட இருக்கலாம்.'' என பதிலளித்தார்.
உரையாடலில் ஒரு ரசிகர், ''கருவுற்றிருக்கும் இரட்டை குழந்தைகளுக்கு நானும், என் மனைவியும் இணைந்து அவர்களுக்கு 'பதான்' மற்றும் 'ஜவான்' என பெயரிட திட்டமிட்டிருக்கிறோம்'' என தெரிவித்தார். இதற்கு பதிலளித்த ஷாருக்கான், ''வாழ்த்துக்கள். ஆனால் அவர்களுக்கு வேறு ஏதாவது சிறப்பான பெயரை வைக்கலாம்'' என்றார்.
மேலும் ஒரு ரசிகர், ''ஜவான் படத்தில் என்னுடைய நண்பருக்கு ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்குமா?'' எனக் கேட்டார். அதற்கு பதிலளித்த ஷாருக்,'' கிடைக்காது என்பதை உங்கள் அன்பு நண்பரிடம் நீங்கள் விளக்க வேண்டும்'' என்றார்.
ஜவானின் மகிழ்ச்சியான விசயம் என்ன? என குறித்து ரசிகர் கேட்டதற்கு, '' இல்லை மகனே..! நான் என் இளமை காலத்தில் உற்சாகத்துடன் திரையரங்கத்திற்கு சென்று படங்களை பார்த்து மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். அது போன்ற ஒரு சந்தோஷத்தை ஜவான் உங்களுக்கு அளிக்கும்'' என்றார்.
'ஜவான்' பட டீசர் குறித்து கேட்டபோது, '' எல்லாம் தயாராக இருக்கிறது. கவலை வேண்டாம். சரியான நேரத்தில் மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்கும், பெறுவதற்கும் பொக்கிஷம் போல் தயாராக இருக்கிறது. '' என்றார்.
புதிதாக பட்டம் பெற்ற பட்டதாரிகள் குறித்த கேள்விக்கு பதிலளித்த ஷாருக், '' நல்வாழ்த்துக்கள். நீங்கள் கற்றுக் கொண்டதை சில சமயங்களில் நினைவில் வைத்துக் கொண்டு வாழ்க்கையில் வெற்றி பெற வேண்டும்.'' என்றார்.
0 comments:
Post a Comment