கஸ்டடி திரை விமர்சனம்

 

பிணவறை டிரைவரின் மகன் நாக சைத்தன்யா, ஒரு காவல் நிலையத்தில் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகிறார். நேர்மையான போலீசாக இருக்கும் நாக சைத்தன்யா ஆம்புலன்ஸுக்கு வழிவிடுவதற்காக முதலமைச்சரின் வாகனத்தையே தடுக்கும் அளவுக்கு நேர்மையாக உள்ளார். இதனிடையே கீர்த்தி ஷெட்டியை சந்திக்கும் நாக சைத்தன்யா அவர் மீது காதல் கொள்கிறார். நாக சைத்தன்யா பணிபுரியும் காவல் நிலையத்தில் உயர் அதிகாரியாக இருக்கும் ஒருவர் இவர்களின் காதல் விஷயத்தை தெரிந்து கொள்கிறார்.


தனக்கு தெரிந்த குடும்பத்தின் பெண்ணை நாக சைத்தன்யா காதலிப்பதால், இதனை மனதில் வைத்துக் கொண்டு அந்த அதிகாரி, நாக சைத்தன்யாவுக்கு வேலை அதிகமாக கொடுத்து டார்ச்சர் செய்கிறார். அப்பொழுது ஒருநாள் அரவிந்த்சாமியையும் சம்பத்தையும் சந்திக்கும் நாக சைத்தன்யா, அவர்கள் குற்றவாளி என்பதை தெரிந்து கொள்கிறார். இதனால் சட்டத்தின் முன்னால் அவரை நிறுத்த வேண்டும் என்று நினைக்கிறார்.


மறுபுறம் அரவிந்த் சாமியை விட்டால் அனைத்து உண்மையும் வெளியே வந்துவிடும் என்பதால் அவரை தீர்த்துக்கட்ட ஒரு கும்பல் துரத்துகிறது. இறுதியில் அரவிந்த்சாமியை, நாக சைத்தன்யா காப்பாற்றினாரா? சட்டத்தின் முன்னால் அவரை நிறுத்தினாரா? கீர்த்தி ஷெட்டி – நாக சைத்தன்யா காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை. நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரும் நாக சைத்தன்யா, தனது நடிப்பின் மூலம் நேர்மையை பார்வையாளர்களுக்கு கடத்துகிறார். காதல், ஆக்‌ஷன் என அனைத்தையும் சரியாக செய்து பாராட்டுக்களை பெறுகிறார். காதலியாக வரும் கீர்த்தி ஷெட்டி படத்திற்கு சிறந்த தேர்வு. இவரது நடிப்பு படத்திற்கு கூடுதல் பலம். அரவிந்த் சாமி தனது அனுபவ நடிப்பின் மூலம் கைத்தட்டல் பெறுகிறார். மாஸ் காட்சிகளில் அனைவரையும் கவர்ந்து பாராட்டுகளை பெறுகிறார்.


படத்தில் தோன்றும் பிரியாமணி, சரத்குமார், சம்பத், பிரேம் ஜி, ராம்கி என அனைவரும் அவர்களுடைய பணியை சிறப்பாக செய்துள்ளனர். காவல்துறையை சுற்றி நடக்கும் விஷயங்களை மையப்படுத்தி கஸ்டடி படத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் வெங்கட் பிரபு. திரைக்கதையில் சுவாரசியம் இல்லாததல் படத்தின் விறுவிறுப்பு மிகவும் சோர்வாக உள்ளது. பல காட்சிகள் தேவையற்றது போன்ற எண்ணம் தோன்றுகிறது. படத்தை விட்டு திரைக்கதை விலகி செல்வதால் அதிகமாக ரசிக்க முடியவில்லை. வெங்கட் பிரபு படத்திற்கு உரித்தான விஷயங்கள் சுத்தமாக இல்லாதது வருத்தம். வெங்கட் பிரபு படமா என்ற கேள்வி எழும் படி கஸ்டடி திரைப்படம் உள்ளது.எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு ஓகே. இளையராஜா – யுவன் சங்கர் ராஜா இணைந்து இசையமைத்துள்ளதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்திருந்தது. ஆனால் படத்தின் பாடல்கள் கேட்கும் ரகம் இல்லை. பின்னணி இசையில் யுவன் சங்கர் ராஜா சமன் செய்துள்ளார்.

0 comments:

Pageviews