கமிஷன் அடிப்படையில் செயல்படும் தமிழ் சினிமா- 'ஜம்பு மகரிஷி' பட தயாரிப்பாளர் இயக்குனர் பாலாஜி பகிரங்க குற்றச்சாட்டு


டி வி எஸ் ஃபிலிம்ஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் பாலாஜி கதையின் நாயகனாக நடித்து தயாரித்திருக்கும் திரைப்படம் 'ஜம்பு மகரிஷி'. இந்த திரைப்படத்தில் பாலாஜி, 'டத்தோ' ராதா ரவி, டெல்லி கணேஷ், 'பாகுபலி' பிரபாகர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பகவதி பாலா ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு புவனேஸ்வரன் இசையமைத்திருக்கிறார். ஜம்பு மகரிஷி எனும் சித்தரின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, தமிழ்- தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர்கள் பூ. பாலாஜி மற்றும் பா. தனலட்சுமி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்தத் திரைப்படம் பல்வேறு தடைகளை கடந்து இம்மாதம் 21ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில் படத்தின் வெளியீட்டில் ஏற்பட்ட பிரச்சனை குறித்தும், படத்தை பற்றியும் தயாரிப்பாளரும், இயக்குநருமான பாலாஜி பத்திரிகையாளர்களை சென்னையில் சந்தித்தார்.
இதன் போது அவர் பேசுகையில், '' அனைத்து விவசாயிகளுக்கும், விவசாய சங்கங்களுக்கும் என்னுடைய நன்றிகள். இந்த 'ஜம்பு மகரிஷி' எனும் திரைப்படம், விவசாயத்தை பற்றியும், விவசாயிகளைப் பற்றியும், ஆன்மீகத்தின் அடிப்படையில் பேசும் திரைப்படம்.
திருவானைக்காவல் சிவாலயத்தில் உள்ள வெண் நாவல் மரத்தினடியில் இன்றும் ஜம்பு மகரிஷி உயிருடன் நடமாடுவதாக ஐதீகம் இருக்கிறது. இந்த ஐதீகத்தை மையமாக வைத்து தான் இந்த திரைப்படம் தயாராகி இருக்கிறது. 3000 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்பவங்களை தான் இப்படத்தில் கதையாக உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படத்தின் கதையை விவரிக்க வேண்டுமென்றால், நம்மை ஆங்கிலேயர்கள் எப்படி அடிமைப்படுத்தினார்களோ.. அதே போல் தற்போது ரியல் எஸ்டேட் தொழிலதிபர்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தி நிலங்களை கையகப்படுத்தி வருகிறார்கள். இதன் நீட்சியாக அவர்கள் ஜம்பு மகரிஷியையும் தொடுகிறார்கள். அதற்குப்பின் என்ன நடந்தது? என்பதுதான் திரைக்கதை.

இன்றைய சூழலில் ஒரு விவசாய குடும்பம் எப்படி சீரழிகிறது? அவர்களின் சொத்து எப்படி மறைமுகமாக சூறையாடப்படுகிறது? அவர்கள் எப்படி ரியல் எஸ்டேட் அதிபர்களின் கடன் வலையில் சிக்கி, தங்களது நிலத்தை இழக்கிறார்கள். கோழிக்குஞ்சுகளை கழுகு எப்படி வானத்திலிருந்து பறந்து வந்து ஷண நேரத்திற்குள் கவர்ந்து செல்கிறதோ... அதேபோல் பெரும் தனவந்தர்களிடம் விவசாயிகள் தங்கள் நிலங்களை இழக்கிறார்கள். மேலும் குத்தகை அல்லது ஒப்பந்த பத்திரங்களின் மூலம் அவர்களை ஆயுள் முழுவதும் அடிமைகளாகவே நடத்துகிறார்கள். வேறு சிலர் வட்டிக்கு பணம் வாங்கி, அதனை திரும்ப செலுத்த இயலாமல் நிலத்தை இழக்கிறார்கள். நானும் இதே போல் என்னுடைய நிலத்தை வட்டிக்காரர்களிடம் இழந்திருக்கிறேன்.

20 ஆண்டு ஒப்பந்தம்... 30 ஆண்டு ஒப்பந்தம்... என்று விவசாயிகளை அலைகழித்து, அவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள். மேலும் விவசாயிகளின் வாரிசுதாரர்கள், விவசாய நிலத்தை குறைந்த விலைக்கு விற்று விடுகிறார்கள். வாரிசுதாரர்களும் விவசாய நிலத்தை மீட்பதில்லை. அங்கு வீடும் கட்டுவதில்லை. விவசாயி என்ற தனக்கான அடையாளத்தையும் தொலைத்து விடுகிறான். விவசாயிகளிடமிருந்து ஏன் விவசாய நிலத்தை பறிக்கிறீர்கள் ? நம்முடைய பாட்டன்.. பூட்டன் எப்படி செழிப்பாக வாழ்ந்தார்கள் என யோசிக்க வேண்டும்? அதனால் விவசாயிகளே...! உங்களுடைய விவசாய நிலத்தை ஒருபோதும் விற்காதீர்கள்.

இந்த தருணத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலினுக்கு வேண்டுகோள் ஒன்றை முன்வைக்கிறேன். கள்ளு கடையை திறக்க அனுமதிக்க வேண்டும். ஏனெனில் இன்றைய விவசாயிகளுக்கு அவரது பாட்டன் பூட்டன் பனை மரத்தை விட்டு விட்டு சென்றிருக்கிறார்கள். அந்த பனைமரமாவது விவசாயிகளின் மரணத்தை தடுத்து, அவர்களின் இறுதி காலத்திற்கு போதிய வருவாயை அளிக்கும். தற்போதுள்ள சூழலில் சில தொழிலதிபர்கள், இந்த பனைமரம் எதற்கும் உதவாது என்று கூறி, செங்கல் சூலையில் செங்கல்களை உருவாக்க மிகக் குறைந்த விலையில் கொள்முதல் செய்து பயன்படுத்துகிறார்கள். அதே தருணத்தில் அந்த பனை மரத்திலிருந்து கள்ளிறக்க அனுமதித்தால்... அதனை அரசிடம் விற்றாவது.. அவர்களின் வாழ்வாதாரம் காப்பாற்றப்படும். அதனால் எங்களுடைய கோரிக்கையை தமிழக அரசு பணிவுடன் பரிசிலித்து நிறைவேற்ற வேண்டுகிறேன்.

'ஜம்பு மகரிஷி' எனும் திரைப்படத்தினை 14 ஆண்டுகளாக தயாரித்து வருகிறேன். முதலில் இயக்குநர், தயாரிப்பாளரை சந்தித்து, பத்து லட்ச ரூபாய் முதலீடு செய்தால் படத்தை நிறைவு செய்து தருகிறேன் என வாக்குறுதி அளித்து வாய்ப்பை பெறுகிறார். அத்துடன் ஆட்டை மாட்டாக்குகிறேன்... வானத்தை வளைத்து விடுகிறேன்... கடலை கயிராக்கி விடுகிறேன்... என ஏராளமாக பேசி, தயாரிப்பாளரை சம்மதிக்க வைக்கிறார். ஆனால் படத்தின் பணிகள் தொடங்கியவுடன் பட்ஜெட் கோடிகளை தொடுகிறது. நான் திரைத்துறையில் தொடர்ந்து படங்களை தயாரிக்கும் பெரிய நிறுவனங்களை குறை சொல்லவில்லை. அவர்கள் தொடர்ந்து லாபத்துடன் பயணித்துக் கொண்டிருக்கிறார்கள்.

சிறிய அளவில் முதலீடு செய்து... சிறிய பட்ஜெட்டில் படமெடுக்கும் தயாரிப்பாளர்களைப் பற்றி தான் பேசுகிறேன். சின்ன பட்ஜெட் தயாரிப்பாளர்கள் தான் இன்று பெரும்பாலும் ஏமாற்றப்படுகிறார்கள் ஏமாற்றத்திற்குள்ளாகிறார்கள். 

ஒரு தயாரிப்பாளரை சந்தித்து, கதையை விவரித்து, இயக்குநர் பட தயாரிப்பு அலுவலகம் ஒன்றை அமைத்தால் போதும். உதவி இயக்குநர்கள்... ஒளிப்பதிவாளர்.. படத்தொகுப்பாளர்.. கலை இயக்குநர்.. என அனைவரும் அவருடைய ஆதரவாளர்களாகவே இருக்கிறார்கள். காட்டில் ஒரு ஆடு இறந்து விட்டால் அதனை நரிகள் சிறிது சிறிதாக பிய்த்து உண்ணும் கதையை போன்றது தான் இயக்குநரின் வாழ்வு. படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் தன் வீட்டை விற்கிறார். இயக்குநர் அலுவலகம் தொடங்குகிறார். படத்தை தயாரித்த தயாரிப்பாளர் நடு ரோட்டில் தத்தளிக்கிறார். இயக்குநர் படத்தை வெளியிட்டுவிட்டு, வேறு படத்திற்காக சென்று விடுகிறார்.

இன்றைய சூழலில் தமிழ் சினிமாவில் பாதியுடன் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட படங்களின் எண்ணிக்கை ஆயிரத்திற்கும் மேல்... அதேபோல் படத்தின் பணிகளை நிறைவு செய்து தணிக்கை சான்றிதழ் பெற்று வெளியாகாத திரைப்படங்களும் ஆயிரத்திற்கும் மேல்.... இந்நிலையில் திரைப்படத்தை விற்பனை செய்வதற்காக தரகர்களாக செயல்படும் விநியோகஸ்தர்கள், தயாரிப்பாளருடன் நடைபெறும் முதல் சுற்று பேச்சு வார்த்தையிலேயே லட்சக் கணக்கில் அட்வான்ஸ் தொகையை கேட்கிறார்கள். தயாரிப்பாளர் விநியோகஸ்தர்களுக்கு லட்சக்கணக்கில் ஏன் அட்வான்ஸ் தொகையை கொடுக்க வேண்டும்? கமிஷன் என விளக்கம் தருகிறார்கள். அதனால்தான் உறுதியாக சொல்கிறேன் தமிழ் சினிமா தற்போது கமிஷன் அடிப்படையில் தான் செயல்படுகிறது.

நான் இந்தத் திரைப்படத்தை மார்ச் மாதம் 31 ஆம் தேதி வெளியிட திட்டமிட்டு விளம்பரம் செய்தேன். ஆனால் குறைவான திரையரங்குகள் மட்டுமே உறுதிப்படுத்தப்பட்டதால் வெளியிடவில்லை. தற்போது 100 திரையரங்குகளில் ஏப்ரல் 21ஆம் தேதி அன்று 'ஜம்பு மகரிஷி' திரைப்படத்தில் வெளியிடுவதற்கான தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறேன். இந்த முறை வெற்றி பெறுவேன் என நம்புகிறேன்.

படப்பிடிப்பு தளத்தில் ஒரு பிரச்சனை ஏற்பட்டது. சண்டைக்காட்சியின் போது சண்டை பயிற்சி இயக்குனருக்குள் கருத்து மோதல் ஏற்பட்டு படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. கடும் போராட்டத்திற்கிடையே இலட்சக்கணக்கில் செலவு செய்து அதன் படப்பிடிப்பை நடத்திக் கொண்டிருந்தேன். சண்டை பயிற்சி இயக்குநர் பிரச்சனை செய்து படப்பிடிப்பை நிறுத்தினார். இதற்காக தயாரிப்பாளர் சங்க பிரதிநிதியான கலைப்புலி எஸ். தாணுவை சந்தித்து, பிரச்சனையை சொன்னவுடன் அவர் அதனை தீர்த்து வைத்தார். படப்பிடிப்பு மீண்டும் நடைபெற்றது. இருப்பினும் எனக்கு சண்டை பயிற்சி இயக்குநரால் லட்சக்கணக்கில் இழப்பு ஏற்பட்டது.

அதேபோல் விரைவில் தயாரிப்பாளர் சங்கத்திற்கு தேர்தல் நடைபெறுகிறது. சிறிய பட்ஜெட் தயாரிப்பாளரான நான்.., தயாரிப்பாளர் சங்கத்திற்கும் ஒரு கோரிக்கையை முன் வைக்கிறேன். சிறிய பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கு நல்ல முறையில்.. நேர்மையான முறையில் செயல்படும் விநியோகஸ்தர்களின் பட்டியலை வழங்குங்கள்.” என்றார்.

0 comments:

Pageviews