சிங்கிள் ஷங்கரும் ஸ்மார்ட்போன் சிம்ரனும் விமர்சனம்
சிம்ரன் என்பது மொபைலில் இன்ஸ்டால் செய்யக்கூடிய ஒரு செயலியின் பெயர். ஷங்கர் என்பவன் உணவினை டெலிவரி செய்யும் ஸ்னிக்கியில் வேலை பார்ப்பவன். எதிர்பாராதவிதமாக சோதனை ஓட்டத்திலுள்ள மொபைல் ஒன்று ஷங்கருக்குக் கிடைக்கிறது. தன் மொபைல் ஓனரைக் காதலிப்பதுதான் அந்தச் செயலியின் வேலை. சிம்ரன், ஷங்கருக்கு யோசனைகள் சொல்லி அவனைக் கோடீஸ்வரனாக்குகிறாள். ஷங்கருக்கோ, துளசி மீது காதல் வருவதால், சிம்ரனிடம், ‘நீ வெறும் மொபைல்’ எனச் சொல்லிவிடுகிறான். சிம்ரன், அழிக்கும் நிலைக்குச் சென்று ஷங்கரின் வாழ்க்கையில் குறுக்கிடுகிறது. செயற்கை நுண்ணறிவின் கோபத்தில் இருந்து ஷங்கரால் தப்பிக்க முடிகிறதா என்பதுதான் படத்தின் கதை.
நாயகன் சிவாவின் இயல்பான உடல்மொழி, வசன உச்சரிப்பு ஆகியன இந்தத் திரைக்கதைக்கும் காட்சியமைப்புகளுக்கும் சரியாகப் பொருந்தி சிரிக்க வைக்கின்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடகர் மனோ நடித்திருக்கிறார்.இது முழுக்க முழுக்க நகைச்சுவைக் கதை என்பதை உணர்ந்து நடித்து வரவேற்புப் பெறுகிறார். கைபேசிப்பெண் மேகா ஆகாஷ் அழகான முகபாவனைகளால் கவர்கிறார்.அங்குமிங்கும் அலையாமல் அரங்குக்குள் இருந்து எதிரே யாருமில்லாமல் நடித்தபோதும் அது தெரியாத மாதிரி நன்றாக நடித்திருக்கிறார். இன்னொரு நாயகி அஞ்சு குரியனும் இயல்பாக நடித்துள்ளார்.
மாகாபா ஆனந்த், கேபிஒய் பாலா, சாரா, பகவதி பெருமாள் ஆகிய அனைவருமே நகைச்சுவைக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ளனர். அவர்களும் அதற்கேற்ப நடித்துள்ளார்கள். லியோன் ஜேம்ஸ் இசையில் ‘ஸ்மார்ட்போன் சென்யோரிட்டா’ பாடல் கவனம் ஈர்க்கிறது. பின்னணி இசை கதைக்களத்திற்கு தேவையான அளவு இருக்கிறது. ஆர்தர் ஏ வில்சனின் ஒளிப்பதிவு படத்துக்குப் பலம். கொஞ்சம் அசந்தால் பெரும் பலவீனம் ஆகியிருக்கும் கணினிவரைகலைக் காட்சிகளை அனைவரும் ஏற்கும்படி கொடுத்திருக்கிறார். எழுதி இயக்கியிருக்கும் விக்னேஷ் ஷா பி என், வித்தியாசமான கதைக்களத்தை வைத்துக்கொண்டு இரசிகர்களைச் சிரிக்க வைப்பது மட்டுமே நோக்கம் என செயல்பட்டிருக்கிறார்.
0 comments:
Post a Comment