உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்ற காரைக்கால் இரட்டையர்கள்


காரைக்காலைச் சேர்ந்த விசாகன் மற்றும் ஹரிணி எனும் இரட்டையர்கள், குறைந்த வயதில், கராத்தே எனும் தற்காப்பு கலையில், இரண்டு முறை பிளாக் பெல்ட்டை வென்று, உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கின்றனர்.
இது தொடர்பாக லண்டனை தலைமையகமாகக் கொண்டு இயங்கும் உலக சாதனை புத்தக நிறுவனம் அளித்திருக்கும் சாதனை சான்றிதழில், '' இந்தியாவில் உள்ள காரைக்காலைச் சேர்ந்த மாஸ்டர் ஸ்ரீ விசாகன். கே மற்றும் பேபி ஸ்ரீ ஹரிணி. கே ஆகிய இரண்டு அதிசய குழந்தைகளும், உலகத்தில் மிகவும் இளம் வயதில் கராத்தே எனும் தற்காப்பு கலையில் இரண்டு முறை பிளாக் பெல்ட்டை வென்ற சாதனையாளர்கள் என அங்கீகரிக்கப்படுகிறது. இவர்கள் இந்த சாதனையை அவர்களின் 6 வயது மற்றும் ஒன்பது வயதில் இரண்டு முறை நிகழ்த்தியிருக்கிறார்கள்'' என குறிப்பிட்டிருக்கிறார்கள்.
உலக சாதனை புத்தகத்தில் 2022 ஆம் ஆண்டு பதிப்பில் இடம்பெற்றிருக்கும் இவர்களது சாதனையால் காரைக்கால் மட்டுமல்ல இந்தியாவில் உள்ள இரட்டையர்களும், ஏனைய மாணவச் செல்வங்களும் பெருமிதம் கொள்கிறார்கள்.

இது தொடர்பாக அவர்களது பெற்றோர்கள் பேசுகையில், '' 2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் பிறந்த இவர்களுக்கு, மூன்று வயதிலேயே காரைக்காலில் உள்ள வி ஆர் எஸ் மார்சியல் ஆர்ட்ஸ் அகாடமி என்ற தற்காப்பு கலையை கற்பிக்கும் நிறுவனத்தில், தற்காப்பு கலைய கற்க அனுமதித்தோம். தற்காப்பு கலையை கற்கத் தொடங்கிய மூன்று ஆண்டுகளில், இவர்களின் ஆறாவது வயதில் முதல் டிகிரி பிளாக் பெல்ட்டை வென்று, இந்தியாவிலேயே முதன் முதலாக இத்தகைய பிளாக்பெல்டை பெற்ற இரட்டையர்கள் என்ற சாதனையை படைத்தார்கள். இதனைத் தொடர்ந்து மலேசியாவில் நடைபெற்ற நான்காவது கே எல் மேயர்ஸ் கப் சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொண்டு கோப்பையை வென்றனர்.

இதனைத் தொடர்ந்து இளம் சாதனையாளர் விருதினையும், கௌரவ டாக்டர் பட்டத்தினையும், தமிழக பண்பாட்டுக் கழகம் வழங்கிய 'ராஜ கலைஞர்' என்ற விருதினையும் வென்றனர். கராத்தே என்ற தற்காப்புக்கலையுடன் நிஞ்சா டோ, டேக்வாண்டோ, கிக் பாக்சிங், மூ தாய், ஜூஜுட்சோ, சிலம்பம் ஆகிய கலைகளுடன் யோகாவையும் கற்று தேர்ச்சி அடைந்திருக்கிறார்கள்.

இதனைத் தவிர்த்து அவர்கள் படிக்கும் பள்ளியில் நடைபெறும் நாடகம், நடனம், பேச்சுப்போட்டி மற்றும் மிகு மன வளர் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பரிசுகளையும் வென்றிருக்கிறார்கள்.

பெற்றோர்களாகிய நாங்கள் அவர்களது  விருப்பங்களை அறிந்து கொண்டு அதற்கு ஆதரவு அளித்து வருகிறோம். அவர்கள் தான் இத்தகைய கலைகளின் மீது பேரார்வம் கொண்டு, குருமார்களின் வழிகாட்டலுடன் போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்று சாதனையாளர்களாக தொடர்கிறார்கள்'' என்றனர்.

இளம் வயதிலேயே கராத்தே எனும் தற்காப்பு கலையில் இரண்டு முறை பிளாக் பெல்ட்டை வென்று, சாதனை படைத்து உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்திருக்கும் நிகழ்வு குறித்து சாதனை இரட்டையர்கள் பேசுகையில், '' பெற்றோர்கள், ஆசிரியர்கள், குருமார்கள் ஆகியோரின் வழிகாட்டுதலுடன் விடாமுயற்சி, பேரார்வத்துடன் இதில் ஈடுபட்டிருக்கிறோம். சாதனைகளை இலக்காக வைத்து நாங்கள் செயல்படுவதில்லை. விசாகனின் இலக்கு, நன்றாக படித்து எதிர்காலத்தில் ஐஏஎஸ் அதிகாரியாகி, நாட்டிற்கு சேவையாற்ற வேண்டும் என்பதுதான். ஹரிணியின் இலக்கு என்பது, மருத்துவம் படித்து, குறிப்பாக இதய நோய் நிபுணராகி, ஏழை எளியவர்களுக்கு சேவை செய்வதே இலட்சியம் '' என சாதனை இரட்டையர்கள் இருவரும் ஒருவரை பற்றி ஒருவர் விவரித்தனர்.

இன்றைய சூழலில் பிறந்து மூன்று மாதமேயான குழந்தையின் கையில் செல்போனை கொடுத்துவிட்டு, தங்களது பணிகளை கவனிக்கும் பெற்றோர்கள் தான் அதிகம். இந்த சூழலில், மூன்று வயதிலேயே கராத்தே மட்டுமல்லாமல் ஏனைய தற்காப்பு கலைகளில் ஆர்வத்தை ஏற்படுத்தி, அதில் கவனத்தை செலுத்தி, சாதனையாளர்களாகவும், முன்னுதாரண மாணவச் செல்வங்களாகவும் முத்திரை பதிக்கும் இவர்கள், மேலும் பல புதிய சாதனைகளை படைத்து, காரைக்கால் மண்ணின் பெருமைகளை மட்டுமல்லாமல், நம் இந்திய தேசத்தின் பெருமையை உலகம் முழுவதும் பறைசாற்ற மனதார வாழ்த்துவோம்.

0 comments:

Pageviews