பொள்ளாச்சி திரைப்பட இசை வெளியீட்டு விழா!!

 


புத்தா பிலிம்ஸ் சார்பில் நேசம் முரளி தயாரித்து, இயக்கி புதுமுகங்களின் நடிப்பில் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகளை மையமாக வைத்து சமூக அக்கறை கொண்ட படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பொள்ளாச்சி” 


இப்படத்தின் இசை வெளியீடு அரசியல் ஆளுமைகள், திரைப்பிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. 


இவ்விழாவினில்..


நடிகர் சங்கர் பேசியதாவது..


நான் மேடையில் இதுவரை பேசியதில்லை. என் முதல் படத்திற்கு பெரிய ஆளுமைகள் வந்திருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குனருக்கு நன்றி. ஶ்ரீகாந்த் தேவா அட்டகாசமாக பாடல்கள் தந்திருக்கிறார். படம் மிக நன்றாக வந்திருக்கிறது. எல்லோரும் தியேட்டரில் படம் பாருங்கள் ஆதரவு தாருங்கள் நன்றி. 


தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் நேசம் முரளி பேசியதாவது…



இந்தப்படத்திற்காக நிறைய ஆராய்ச்சிகள் மேற்கொண்டு, கடுமையாக உழைத்து இந்தப்படத்தை எடுத்துள்ளோம். இப்படம் கண்டிப்பாக உங்கள் மனதை அழுத்தமாக பாதிக்கும் வகையிலான படைப்பாக இருக்கும். இப்படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 



இணை தயாரிப்பாளர் S.கோகுல் பிரசாத் பேசியதாவது…


இந்தப்படம் உண்மையில் நடந்த கதை ஆனால் எந்த கட்சியையும் தாக்கி எடுக்கப்பட்டதல்ல. ஆனால் இந்தகதையை தயாரித்துள்ளேன் இப்படம் பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளை பேசும். படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 


ஆர் வி உதயகுமார் பேசியதவாது…



இயக்குநர் நேசம் முரளி அவர்களால் இயக்குநர் சங்கம் பெருமைபடுகிறது. ஒவ்வொரு படங்களையும் பாதிக்கப்பட்ட மக்களின் குரலாக எடுக்கிறார். ஒரு படம் என்ன செய்யும்??, ஒரு படத்தை பார்த்து அரசாங்கம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரேசன் கார்ட் தருவது நடக்கிறது. நீங்கள் என்ன படம் வேண்டுமானாலும் எடுக்கலாம் ஆனால் அந்த படம் இறுதியில் என்னவாகிறது என்பதே முக்கியம். உங்களிடம் ஒரு வேண்டுகோள் மத ரீதியாக கலவரத்தை தூண்டும்படியான படங்களை எடுக்காதீர்கள். இன்றைய சூழல் மிக மோசமாக இருக்கிறது. இந்தப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டது. இந்தப்படம் மிகப்பெரிய வெற்றிப்படமாக வாழ்த்துகள். 



இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா பேசியதாவது



மிக மகிழ்ச்சியாக இருக்கிறது. நேசம் முரளி ஒவ்வொரு முறையும் வித்தியாசமான கதையை தான் சொல்கிறார். இந்தப்படமும் கண்டிப்பாக  பாதிக்கப்பட்ட மக்களின் வலிகளை பேசும்.  அண்ணன் திருமாவளவன் வந்து வாழ்த்துவது மிக மகிழ்ச்சி. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம், படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி. 



மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் கே பாலகிருஷ்ணன் பேசியதாவது…


ஒரு முக்கியமான கருவை எடுத்து அதை படமாக்கிய நேசம் முரளிக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். திரைப்படம் கமர்ஷியலாக எடுக்கலாம் ஆனால் கருத்து ரீதியான படங்கள் தோல்வி அடையும் சூழல் இருக்கு திரைத்துறையில் இவர்கள் இப்படத்தை எடுத்திருப்பது மகிழ்ச்சி. பொள்ளாச்சி நம் கண் முன் நடந்த பயங்கரம். இன்னும் அந்த கேஸ் நடந்து வருகிறது. சோகம் என்னவென்றால் நான்காண்டுகளாகியும் அந்த வழக்கில் இன்னும் கேஸ் ஷீட் பதிவாகவில்லை. இந்த நிலை மாற வேண்டும். இந்திய சட்ட அமைப்பு மாற வேண்டும் அதன் நடைமுறை மிக சிக்கலாக இருக்கிறது. இந்தப்படம் வலிகளை பேசும் என நம்புகிறேன் அனைவருக்கும் வாழ்த்துகள் நன்றி. 


இயக்குநர் ஆர் கே செல்வமணி பேசியதாவது…



இந்த விழா எங்கள் சங்கத்தில் நடப்பது மகிழ்ச்சி. இந்தியாவில் சட்ட அமைப்பு எல்லாம் வெளி நாட்டைக் காட்டிலும் நன்றாகவே இருக்கிறது ஆனால் அதை நடைமுறைப்படுத்துவதிலும் கடைப்பிடிப்பதிலும் தான் இங்கு சிக்கல் இருக்கிறது. அந்த நிலை மாற வேண்டும். இந்தப்படம் மிக சிக்கலான பிரச்சனையை பேசுகிறது. இது எந்தப்பக்கத்தில் இருந்து பேசுகிறது என்பதே முக்கியம். இந்தியாவில் எந்தக்கதையை வேண்டுமானாலும் படமெடுக்கலாம். ஆபாசமாக படமெடுக்கலாம் ஆனால் உண்மையை மட்டும் எடுக்க கூடாது. என் படத்திற்கு அது நடந்தது. உண்மை பலரை சுடும். இந்த காலத்தில் சமூக வலைதளங்கள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. போனில் இருக்கும் அனைத்தும் வேறொருவரால் கண்காணிக்கப்படுகிறது இதை இளைய தலைமுறைக்கு சொல்லித்தர வேண்டும். இந்தப்படம் அந்த விசயத்தையும் பேசும் என நம்புகிறேன். படக்குழுவினருக்கு என் வாழ்த்துகள். 


திரு தொல் திருமாவளவன் பேசியதாவது…



ஒரு திரைப்படம் என்ன பேசுகிறது என்பதை போல் அந்தப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெறுகிறதா என்பது இப்போது முக்கியமாகிறது. இந்தக்காலத்தில் சம உரிமை பற்றி ஜாதி பற்றி பேசுவது அதிகரித்துள்ளது ஆனால் பெண்கள் மீதான வன்முறை இன்றும் பேசப்படுவதில்லை. ஒரு பெண் என்ன உடை உடுத்த வேண்டும் என்பதில் ஆரம்பித்து, அவள் படிப்பு அவள் குழந்தை பெற்றுக்கொள்வது வரை அவளது குடும்பமே தீர்மானிக்கிறது. அந்த வகையில் இந்திய கலாச்சாரமே பெண்களை அடங்கி நடக்கவே பழக்குகிறது. ஒவ்வொரு வீடுமே பெண்களுக்கு பொள்ளாச்சி தான். ஆனால் பொள்ளாச்சி பாலியல் வன்முறை பொதுவெளியில் வந்ததால்  அதன் மீது வெளிச்சம் விழுந்துள்ளது. இந்த கதைகள் மீண்டும் மீண்டும் திரையில் பேசப்பட வேண்டும். இந்தக்கதையினை எடுத்திருக்கும் படக்குழுவினருக்கு எனது வாழ்த்துகள் படம் வெற்றி பெற வாழ்த்துகள்.


0 comments:

Pageviews