மா.ரா. செளந்தரராஜன் 100-வது வயதிலும் விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்று சாதிக்க வேண்டும்!'' -முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய 'நில், கவனி, யோசி, செயல்படு...' நூல் வெளியீட்டு விழாவில் தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் 'வால்டர்' தேவாரம் பேச்சு


சர்வதேச விளையாட்டு வீரரும், சமூகச் சிந்தனையாளருமான முனைவர் மா.ரா. செளந்தரராஜன் எழுதிய 'நில், கவனி, யோசி, செயல்படு...', 'Stop, Listen, Think, Act...' என்ற இரு நூல்களின் வெளியீட்டு விழா 11.9.2022 ஞாயிற்றுக் கிழமையன்று சென்னை வடபழனி கிரீன் பார்க் நட்சத்திர ஹோட்டலில் சிறப்பாக நடந்தது. 
நிகழ்வில், சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் 'வால்டர்' தேவாரம், தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம், மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர் டி.எஸ். ராஜசேகர், சென்னை விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகர் ராஜா, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துராஜ், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மாவட்ட பத்திரப்பதிவு முன்னாள் அலுவலருமான துரைராஜ், சிவசேனா மாநில செயல்தலைவர் க. சசிக்குமார், கிராமணி மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவர் கே.வி.எஸ். சரவணன், 'சிபிசிஎல்' கஜேந்திரபாபு, தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தலைவர் தளபதி,  பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா (தமிழ்மொழி (ம) மொழியியல் புலம் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்), சிகரம் குழும இயக்குநர் சந்திரசேகர், தமிழ்நாடு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர்  முனைவர் குமார், புத்தகத்தைப் பதிப்பித்துள்ள மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், வசந்தா பதிப்பக நிறுவனர் மோ. பாட்டழகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 
'நில், கவனி, யோசி, செயல்படு...' நூலினை தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் 'வால்டர்' தேவாரம் வெளியிட, சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் பெற்றுக் கொண்டார். 
'Stop, Listen, Think, Act...' நூலினை சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன் வெளியிட, தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம் பெற்றுக் கொண்டார். 
விழாவில், சிவசேனா மாநில செயல்தலைவர் க. சசிக்குமார், ‘‘நீதிநெறியை, நல்லொழுக்கத்தைக் கற்பிக்க சிலப்பதிகாரம், திருக்குறள் உள்ளிட்ட நூல்கள், மருத்துவம் குறித்து தெரிந்துகொள்ள போகர், புலிப்பாணி உள்ளிட்டோர் எழுதிய நூல்கள் இப்படி ஏராளமான நூல்களுக்கு நம்முடைய மண்தான் முன்னோடி. அதனால்தான் நம் மக்கள் அறிவில் சிறந்தவர்களாக இருந்தார்கள். ஆங்கிலேயர்களின் ஊடுருவலுக்குப் பின்னர் அவர்கள் நம்மை நிரந்தரமாக ஆளவேண்டும் என்றால் நம் மக்கள் அறிவில் சிறந்தவர்களாக இருப்பதை மாற்றவேண்டும் என தீர்மானித்தார்கள். அதற்காகவே மெக்காலே கல்வித் திட்டத்தை கொண்டு வந்தார்கள். இன்றைக்கும் நாம் அதைத்தான் பின்பற்றுகிறோம்.
இளைய தலைமுறை நம் முன்னோர்களைப் பற்றியெல்லாம் படிக்க வேண்டும். ஆனால், படிப்பதில்லை. மாணவச் சமுதாயம், இளைஞர்கள் பல்வேறு விதங்களில் சீரழிகிறார்கள். அவர்கள் மீதெல்லாம் அக்கறை கொண்டு விழிப்புணர்வூட்டும் கருத்துக்களை 'நில், கவனி, யோசி, செயல்படு...' நூலின் ஆசிரியர் மா.ரா. செளந்தரராஜன் விவேகானந்தர் போல் எடுத்துச் சொல்லியிருக்கிறார். இந்த நூல் பல மொழிகளில் பதிப்பிக்கப்பட்டு வெளிவரவேண்டும். நூலாசிரியர் மேலும் பல நூல்களைப் படைக்க அவருக்கு அறிவையும் ஆற்றலையும் இறையருள் வழங்க வேண்டும்'' என்றார். 
தமிழறிஞர் ம.பொ.சி.யின் உறவினரும், கிராமணி மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனர் தலைவருமான கே.வி.எஸ். சரவணன், ‘‘நூலாசிரியர் உற்சாகத்துக்குப் பேர் போனவர். உடனிருப்பவர்களை தளபதி தளபதி என்று அழைத்து அவர்களையும் உற்சாகப்படுத்துபவர். இந்த நூலில் விக்கிபீடியா போல் கூட்டுக் குடும்பச் சூழல், கொரோனா காலகட்ட அனுபவம் என எல்லாமும் இருக்கிறது. அவை எல்லாமும் எல்லாருக்கும் தெரிந்தவைதான். ஆனால், இந்த நூலில் அவை சுவாரஸ்யமாக இருக்கிறது. நூலாசிரியர் பற்றி சுருக்கமாக சொல்ல வேண்டுமென்றால் அவர் படிப்பில் மெரிட், பண்பில் மெரிட், அன்பில் மெரிட்'' என்றார்.
 
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முத்துராஜ்,‘‘இந்த நூலின் ஆசிரியர் செளந்தரராஜன் எப்போதும் சக்ஸஸ், சக்ஸஸ் என்று சொல்லிக் கொண்டே இருப்பார். அவருடன் இருந்தால் அவருடைய எனர்ஜி நமக்கு டிரான்ஸ்பர் ஆகிவிடும்'' என்றார்.
 
மதபோதகர் Rev. ஜெயசிங், ‘‘நூலாசிரியர் சிறுவயதிலேயே சாம்பியனாகி சாதித்திருப்பது நாட்டுக்குப் பெருமை. அவருக்காக, அவரிடம் சொல்லிவிட்டு தினமும் காலை நான்கு மணிக்கு ஜெபம் செய்கிறேன். அவர் மேலும் சாதனைகள் படைத்து தமிழகத்துக்கு சிறப்பு சேர்க்க பிரார்த்திக்கிறேன்'' என்றார். 
தமிழ்நாடு தலைமைச் செயலக அனைத்து பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர்  முனைவர் குமார், ‘‘மா.ரா. செளந்தரராஜன் சமூக அக்கறை கொண்ட மாமனிதர். மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருப்பவர். பொதுநல நோக்கில் புத்தகம் எழுதியுள்ளார். அரசாங்கம் அவருக்கு, அவரது தகுதிக்குரிய வாரியத்தில் பதவி வழங்கி கெளரவிக்க வேண்டும்'' என்றார். 
'சிபிசிஎல்' கஜேந்திரபாபு, ‘‘செளந்தரராஜன் அவர்களை 35 வருடங்களாகத் தெரியும். தன்னம்பிக்கையின், உற்சாகத்தின் அடையாளம் அவர். எதையும் ஈஸியாக எடுத்துக் கொள்பவர்'' என்றார். 
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞரும் மாவட்ட பத்திரப்பதிவு முன்னாள் அலுவலருமான துரைராஜ் ‘‘சமீபத்தில்தான் இந்த நூலின் ஆசிரியர் எனக்கு பழக்கம். அவர் சொன்னதை செய்யக்கூடியவர். புத்தகம் குறித்து பேசும்போது ஒருவரிடம் உங்களின் பேவரைட் புத்தகம் எது என்று கேட்டால் இராமாயணம், மகாபாரதம் என ஒவ்வொன்றை சொல்வார்கள். அதையெல்லாம் தாண்டி, நாம் சொல்ல நினைக்கும் கருத்தை எந்த புத்தகமெல்லாம் சொல்கிறதோ அந்த புத்தகங்கள்தான் நமது பேவரைட் புத்தகங்கள். அந்த வகையில் இந்த புத்தகம் நாம் சொல்ல நினைப்பதை சொல்கிற புத்தமாக இருக்கிறது. அதனால், இது நம் எல்லோருக்குமே பேவரைட் புத்தகம்! சமூக நலன் கருதி செயல்படும் இவர் வருங்காலத்தில் ராஜ்யசபா எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு கெளரவிக்கப்பட வேண்டும்'' என்றார். 
தமிழ்நாடு சின்னத்திரை இயக்குநர்கள் சங்கத் தலைவர் தளபதி, ‘‘பறவைகள் பலவிதம் என பாடலில் சொல்வதுபோல் மனிதர்கள் பலவிதம். அதில் எல்லா விதத்திலும் நல்லவராக இருப்பவர் மா.ரா. செளந்தரராஜன். அவர் எனக்கு அறிமுகமானபோது எப்படியொரு எனர்ஜியோடு பார்த்தேனோ அந்த எனர்ஜியை இப்போது வரை பார்க்கிறேன். இந்த நூலில் பாட்டி வைத்தியம் முதல் இன்றைய செல்ஃபி மோகம் வரை பல விஷயங்களை எழுதியுள்ளார். வங்கிகளின் போக்கு குறித்தெல்லாம் பதிவு செய்துள்ளார். மொத்தமாக பார்த்தால் இந்த நூல் ஒரு என்சைக்ளோபீடியா போல் இருக்கிறது. நூலின் முன் பக்கத்தில் அவரது சாதனைகளுக்காக பெற்றுள்ள மெடல்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள். அந்த எண்ணிக்கையைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது'' என்றார். 
சிகரம் குழும இயக்குநர் சந்திரசேகர், ‘‘வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள் தலைவர்கள் ஆகலாம், இப்போது தலைவர்களாக இருப்பவர்கள் வாசிப்புப் பழக்கம் கொண்டவர்கள்' என்ற அர்த்தத்தில், ஆல் ரீடர்ஸ் ஆல் லீடர்ஸ், ஆல் லீடர்ஸ் ஆல் ரீடர்ஸ் என்று சொல்வார்கள். புத்தகம் என்பது அத்தனை சக்தி வாய்ந்தது. இன்று நாம் எல்லோருமே எதற்காக ஓடுகிறோம், எதை நோக்கி ஓடுகிறோம் என்பது தெரியாமலே ஓடுகிறோம்; ஓடிக் கொண்டேயிருக்கிறோம். அப்படிப்பட்டவர்களை நிறுத்தி, நிதானித்து, யோசித்து செயல்பட வலியுறுத்தும் விதமாக 'Stop, Listen, Think, Act...' என்ற நூலினை எழுதியுள்ளார். நூலின் தலைப்பே உள்ளடக்கத்தை சொல்லிவிடுகிறது. 
வாழ்க்கை எப்போது முழுமையடைகிறது, நிறைவடைகிறது என்ற பேச்சு எழும்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகச் சொல்வார்கள். அதையெல்லாம் தாண்டி புத்தகம் எழுதும்போதுதான் ஒருவரின் வாழ்க்கை முழுமையடைகிறது என்று சொல்கிறவர்கள் உண்டு. இந்த புத்தகம் எழுதிய வகையில் மா.ரா. செளந்தரராஜன் அவர்கள் நிறைவு பெற்ற மனிதராகிவிட்டார் என்று சொல்லலாம்'' என்றார். 
பேராசிரியர் முனைவர் நா. சுலோசனா,‘‘வலிதான் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைகிறது. இந்த நூலின் ஆசிரியரும் வலிகளைக் கடந்து எதிர்நீச்சல் போட்டு சாதித்திருக்கிறார். இந்த நூலை முழுமையாக படித்தேன். வாழ்க்கைப் பாதையின் அனுபவங்களை சிறுசிறு செய்திகளாக தந்துள்ளார். நாம் மாணவர்களை எதிர்காலத்தில் அப்படி ஆகவேண்டும் இப்படி ஆகவேண்டும் என்றெல்லாம் சொல்லி வளர்க்கிறோம். மனிதனாக சொல்வதில்லை. இந்த புத்தகம் அதை சொல்கிறது. மாணவர்களுக்கு மட்டுமல்ல; ஆசிரியர்களுக்கும் இந்த நூலில் செய்தி இருக்கிறது. விருந்தோம்பல் பண்பாட்டை பற்றியும் எடுத்துச் சொல்லியிருக்கிறார். தமிழக தலைமைச் செயலாளர் வெ. இறையன்புவின் செய்தியொன்றையும் பதிவு செய்துள்ளார். மதத்தை ஒழிக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறார். இந்த நூல் பற்றி பேச இரண்டு, மூன்று நிமிடங்கள் பத்தாது. ஒருவாரம் முழுக்க பேசலாம். அந்தளவுக்கு விஷயம் இருக்கிறது. செளந்தரராஜனுக்கு நடிகராகவும் இருக்கிறார். அவரது சாதனைகளுக்கு, அவருடைய துணைவியார் பிந்து உறுதுணையாக இருக்கிறார். அவரையும் பாராட்ட வேண்டும்'' என்றார். 
வேளச்சேரியில் உள்ள நேரு ஹையர் செகண்டரி ஸ்கூலின் எம் .டி . நேரு, ‘‘இவரது புத்தகத்தின் கருத்துக்களை பள்ளியின் பிரேயரில் எடுத்துச் சொல்லலாம்'' என்றார். 
‘ரிசர்வ் பேங்க்' முத்து விஜயகுமார், இந்த புத்தகத்தை வியாபார நோக்கமில்லாமல் கொண்டு வந்துள்ளார். வாழ்க்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள பத்து ஜென்மம் எடுத்தாலும் போதாது என்று சொல்வார்கள். அதெல்லாம் தேவையில்லை. இந்த ஒரு புத்தகத்தைப் படித்தாலே புரிந்துகொள்ளலாம். அந்தளவுக்கு இந்த புத்தகத்தில் எல்லாமே ஹைலைட்டாக இருக்கிறது. செளந்தரராஜனை கேப்டன் என்று சொல்லலாம். டீம் லீடருக்கான அத்தனையும் அவரிடம் உள்ளது. பலருக்கும் நம்பிக்கை கொடுத்து வழிநடத்தக் கூடியவர். நம்பிக்கை கொடுப்பதோடு அவரே இன்ஸ்பிரேஷனாக இருப்பவர். தன்னைப் போலவே பிறரும் சாதிக்க வேண்டும் என்று கருதி ஊக்குவிப்பவர்'' என்றார். 
 பெரோஸ்கான், இளைஞர்களுக்கு செளந்தரராஜனை சுட்டிக் காட்டி இவரைப்போல் வாழ்ந்து காட்டு என்று சொல்லலாம்'' என்றார். 
புத்தகத்தைப் பதிப்பித்துள்ள மணிமேகலைப் பிரசுரத்தின் நிர்வாக இயக்குநர் ரவி தமிழ்வாணன், ‘‘எங்கள் பதிப்பகத்தில் 11,500 புத்தகங்கள் வரை பதிப்பித்துள்ளோம். ஆனால், இந்த புத்தகத்தின் தலைப்பைப் போல் நெற்றியடியான தலைப்பை வைத்ததில்லை. எல்லோரும் புத்தகத்தை விலை கொடுத்து வாங்கிப் படிக்க வேண்டும். வரும் அக்டோபர் 1-ம் தேதி சிங்கப்பூரில் இந்த புத்தகங்களின் வெளியீட்டு விழா நடக்கவிருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்'' என்றார். 
மாநில திட்டக்குழு உறுப்பினர் செயலாளர் டி.எஸ். ராஜசேகர், ‘‘செளந்தரராஜன் எனக்கு பத்துப் பனிரெண்டு வருடப் பழக்கம். இந்த புத்தகத்தில் எல்லாமே இருக்கிறது. நான் பார்த்த முதல் நாளிலிருந்து இன்று வரை அப்படியே இருக்கிறார். அதற்கான ரகசியம் என்னவென்பது மட்டும் புத்தகத்தில் இல்லை. அதை தெரிந்துகொள்ள வேண்டும்.
பரபரப்பாக இருப்பவர்கள் குடும்பத்தைக் கவனிக்க நேரம் ஒதுக்குவதில்லை என்று குறை சொல்வார்கள். ஆனால், செளந்தரராஜன் எத்தனை பிஸியாக இருந்தபோதும் குடும்பத்தையும் கவனிப்பவர்'' என்றார். 
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் பன்னீர் செல்வம், ‘‘செளந்தரராஜன் எப்போதுமே பாசிடிவ் எனர்ஜியோடு இருப்பார். அவரிடம் ஒரு உத்வேகம் இருந்துகொண்டேயிருக்கும். அது அவரது ஸ்போர்ட்ஸ் ஈடுபாட்டால் வந்ததா, இல்லை அவரது இயல்பே அதுதானா என தெரியவில்லை. இந்த புத்தகத்தில் கல்கண்டு போல் ஏராளமான தகவல்கள் இருக்கிறது. சம்பாதிப்பதில் 20 சதவிகிதத்தை சேமித்தால் பணப் பிரச்சனையின்றி வாழலாம் என்று சொல்லியிருக்கிறார். எல்லாவற்றையும் வாழ்க்கை அனுபவத்திலிருந்து சொல்லியிருக்கிறார்'' என்றார். 
சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி எஸ்.கே. கிருஷ்ணன், ‘‘சாதாரண மனிதன் சாதனைகள் மூலம் பொது மனிதன் ஆகிறான். செளந்தரராஜனும் பொது மனிதர்தான். ஜெர்மனியில் அவர் நிகழ்த்திய சாதனை மிகப் பெரியது. சாதனைகள் ஒருபுறமிருக்க அவரது இல்லத் திருமணத்திற்கு அவரது ஊருக்குச் சென்றிருந்தபோது அவரது நல்ல குணங்களை நேரில் கண்டேன். செளந்தரராஜன் நடிகராகவும் இருக்கிறார். அவர் எல்லா விதத்திலும் முன்னேற வேண்டும். அவரால் சமூதாயம் எழுச்சிபெற வேண்டும். இப்போதிருப்பதைவிட இன்னும் பெருமைமிக்க மனிதராக விளங்க வேண்டும். அரசாங்கம் இவரை கண்ணெடுத்துப் பார்க்க வேண்டும்'' என்றார். 
தமிழ்நாடு காவல்துறை முன்னாள் தலைவர் 'வால்டர்' தேவாரம், ‘‘செளந்தரராஜன் 8 வயதில் கால் குறைபாட்டுக்கு ஆளானவர். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் பெரும்பாலும் மனமுடைந்து விடுவார்கள். ஆனால், செளந்தரராஜன் தன்னம்பிக்கையோடு மாற்றுத் திறனாளிகளுக்கான உலகளவிலான போட்டிகளில் பங்கேற்று பல சாதனைகளை படைத்துள்ளார். அவரது திறமையை புரிந்து ஊக்குவித்ததில் பெருமையடைகிறேன். அவரது முன்னேற்றம் முயற்சியாலும் தன்னம்பிக்கையாலும் கிடைத்தது. 
மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் பொறுத்தவரை வெளிநாடுகளில் பெரியளவில் ஊக்குவிக்கிறார்கள். நம்மூரில் அப்படியான ஊக்குவிப்பு குறைவாகவே இருக்கிறது. மாற்றுத் திறனாளிகள் 100 வயது வரை கூட விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்கலாம். அதற்கேற்ற போட்டிகள் இருக்கின்றன. சமீபத்தில் கூட அப்படியான போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற 100 வயதான ஒருவருக்கு என் கையால் பரிசளித்து பாராட்டும் வாய்ப்பு கிடைத்தது. அதேபோல் செளந்தரராஜனும் 100 வயது வரை இப்போது இருக்கும் அதே உற்சாகத்துடன் செயல்பட்டு நாட்டுக்கு பெருமை தேடித்தர வாழ்த்துகிறேன்'' என்றார். 
'வால்டர்' தேவாரம் தான் காவல்துறை அதிகாரியாக பொறுப்பும், உயர் பதவிகளும் வகித்த காலகட்டத்தில் விளையாட்டு வீரர்களை ஊக்குவிப்பதில் காட்டிய ஈடுபாடு, அவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது, தானே உடன் சென்று வீரர்களை போட்டிகளில் பங்கேற்கச் செய்தது என பலவற்றை குறிப்பிட்டார்.
தான் பொறுப்பு வகித்தபோது, முதலமைச்சர் கலைஞர் கருணாநிதியிடம் காவல்துறையில் பெண் காவலர்கள் ஏன் அவசியம் என்பதை எடுத்துச் சொல்லி, பெண் காவலர்களை பணியில் அமர்த்தியது, பின் எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் மாநிலம் முழுக்க பெண் காவலர்களை நியமனம் செய்தது உள்ளிட்ட பல தகவல்களை புள்ளிவிவரங்களோடு எடுத்துச் சொன்னார். நாட்டிலேயே தமிழ்நாட்டில் தான் காவல்துறையில் பெண்கள் அதிகம் பேர் பணிபுரிகிறார்கள் என்பதையும் பெருமிதமாக எடுத்துச் சொன்னார். 
விழாவில் வாழ்த்துரை வழங்கிய பலரும் புத்தகம் பற்றி பேசியதோடு, நூலாசிரியரின் சாதனைகள், பழகும் விதம் உள்ளிட்டவற்றை பாராட்டினர். மட்டுமல்லாது பேசிய அத்தனை பேரும் விழாவின் சிறப்பு விருந்தினரான வால்டர் தேவாரம் பற்றியும் அவர் காவல்துறையில் பதவி வகித்தபோது எத்தனை கம்பீரமாக, சிங்கமாக, சிம்ம சொப்பனமாக இருந்தார் என்பது பற்றியும் எடுத்துச் சொல்லி புகழாரம் சூட்டினார்கள்.  
விழாவை கவிஞரும், பட்டிமன்றப் பேச்சாளருமான ஓய்வுபெற்ற தலைமையாசிரியர் யோ.சா. ராஜேந்திரன் தொகுத்து வழங்கினார். தொகுப்புரையின் இடையிடையே நூல்கள் குறித்து பிரபலங்கள் சொல்லிச்சென்ற கருத்துக்களை பதிவு செய்தார். 
விழாவிற்கு வந்தவர்களுக்கு இரவு உணவு வழங்கப்பட்டது. மணிமேகலை பிரசுரத்தில் இப்புத்தகம் கிடைக்கும் .

0 comments:

Pageviews