குழலி விமர்சனம்

 


திண்டுக்கல் அருகாமையில் உள்ள கிராமத்தில் உயர் சாதியைச் சேர்ந்தவர் ஆரா. அவருக்கும் அவரை விட பிற்படுத்தப்பட்ட சாதியைச் சேர்ந்த விக்னேஷ் உடன் சிறு வயதில் பள்ளியில் படிக்க ஆரம்பித்த காலத்திலிருந்தே நட்பு. 12வது வகுப்பு படிக்கும் போது அந்த நட்பு காதலாக வளர்ந்து நிற்கிறது. இவர்களது காதல் விவகாரம் சாதி வெறி பிடித்த ஆராவின் உறவினர்களுக்குத் தெரிய வருகிறது. ஆராவை பள்ளியை விட்டே நிறுத்துகிறார் அவரது அம்மா. படிக்க ஆசைப்படும் ஆரா, காதலன் விக்னேஷ் உடன் ஓடிச் சென்று எங்காவது படிக்க ஆசைப்படுகிறார். அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் படத்தின் மீதிக் கதை.


வாலிப வயதைத் தொட்டுக் கொண்டிருக்கும் ‘காக்கா முட்டை ‘ விக்னேஷுக்கு இந்தப் படம் சிறப்பான வாயிலைத் திறந்து விட்டிருக்கிறது. வயலில் ஆரா மயக்கம் போட்டு விழுந்ததைப் பார்த்ததும் தங்கள் கிராம கட்டுப்பாட்டுகளை எல்லாம் தூக்கி எறிந்து விட்டு அவளைத் தோளில் தாங்கி, கீழே விழுந்து விடாமல் துண்டால் இருகக் கட்டி வைத்தியரிடம் வண்டியில் கொண்டு வரும் வேகத்தில் திகைக்க வைக்கிறார். உணர்ச்சிகரமான காட்சிகளில் அவருக்கு நடிப்பு கை கொடுப்பது போல், நடனக் காட்சிகளிலும் அவரது நடனத் திறன் ‘ கால்’ கொடுக்கிறது. ‘ஆரா ‘வும் அப்படியே. பருவம் கொப்பளிக்கும் பள்ளி இறுதி மாணவியாக வரும் அவர், அந்தப் பாத்திரத்தில் அச்சில் வார்த்தது போல் பொருந்திப் போகிறார்.


விக்னேஷின் அப்பாவாக வரும் அலெக்ஸும் ஆராவின் தாயாக வரும் செந்தியும் பண்பட்ட நடிகர்கள் என்பதால் அந்தப் பாத்திரத்துக்கு நியாயம் சேர்த்திருக்கிறார்கள். பிற பாத்திரங்களில் வரும் யாவரும் புதுமுகங்களே ஆனாலும் அப்படித் தெரியாமல் அவர்களது இயல்பான நடிப்பு நம்மை அந்த கிராமத்துக்குள்ளேயே அழைத்துச் செல்கிறது. படத்தின் இசையமைப்பாளர் யார் எனக் கேட்க வைத்திருக்கிறார் இசையமைப்பாளர் உதயகுமார். இளையராஜாவின் தீவிர ரசிகர் போலிருக்கிறது. பின்னணி இசையிலும், பாடல்களிலும் தனது திறமை வெளிப்பட வேண்டும் என உழைத்திருக்கிறார். ஒளிப்பதிவாளர் சமீர், திண்டுக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளை அழகாகப் படமாக்கி ரசிக்க வைத்திருக்கிறார். 


இந்த ‘குழலி’ ஒரு மண்வாசனைப் படம் என தாராளமாகப் பாராட்டலாம். 

0 comments:

Pageviews