ஒய் ஜி மகேந்திரனின் சாருகேசி நாடகத்தை பார்த்து, ரசித்து வெகுவாக பாராட்டிய கமல்ஹாசன்
திரு ஒய்ஜிபி துவங்கிய யுஏஏ குழுவின் 70-ம் ஆண்டு, நாடக உலகில் ஒய் ஜி மகேந்திரனின் 61-ம் ஆண்டு போன்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் அவரது புதிய நாடகமான சாருகேசி பலரின் பாராட்டை பெற்று வருகிறது.
இதற்கு மேலும் சிறப்பு சேர்க்கும் விதமாக உலகநாயகன் கமல்ஹாசன் சாருகேசி நாடகத்தை நேற்று நேரில் சென்று கண்டு மகிழ்ந்தார். நாடகம் முடிந்த உடன் குழுவினருடன் அவர் கலந்துரையாடினார்.
இது குறித்து ஓய் ஜி மகேந்திரன் கூறுகையில், "நாடகத்தை பார்த்த கமல்ஹாசன் வெகுவாக பாராட்டினார். இது போன்ற நாடகங்கள் தனக்கு மிகவும் புடிக்கும் என்று அவர் தெரிவித்தார். எங்கள் இருவருக்கும் 50 வருட கால நட்பு. மேலும் 20 படங்கள் மேல் ஒன்றாக நடித்திருக்கிறோம். எங்களுக்கிடையே இருக்கும் நட்பை பற்றியும் அவர் நினைவுகூர்ந்தார்," என்றார்.
தொடர்ந்து பேசிய மகேந்திரன், "சாருகேசி நாடகத்தை திரைப்படமாக எடுக்க வேண்டும் என்று தனது எண்ணத்தை கமல் அவர்கள் வெளிப்படுத்தினார். அவ்வாறு படமாக எடுக்கப்பட்டால் அவரது ஒத்துழைப்பு வேண்டும் என்று நான் அவரிடம் கூறினேன். அதற்கும் அவர் சம்மதம் தெரிவித்தார்," என்று தெரிவித்தார்.
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது குடும்பத்தினருடன் சென்று சாருகேசி நாடகத்தை பார்த்து, நாடக குழுவினரை தனது வீட்டிற்கே அழைத்து வெகுவாக பாராட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment