O2 விமர்சனம்
நயன்தாராவின் ஒரே மகன் ரித்விக் நுரையீரல் பாதிப்பால் மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படுகிறது. எப்போதும் ஆக்சிஜன் சிலிண்டர் மூலம் தான் அவன் சுவாசிக்க முடியும். அதற்கான ஆபரேஷன் செய்வதற்காக கோயம்புத்தூரில் இருந்து கொச்சிக்கு ஆம்னி பேருந்து மூலம் செல்கிறார். கடும் மழைக்கு இடையில் நிலச்சரிவில் அந்த பேருந்து சிக்கிக் கொள்கிறது. பேருந்தில் இருப்பவர்கள் சுவாசிக்க ஆக்சிஜன் தேவைப்படுகிறது. அதனால் நயன்தாராவின் மகன் ரித்விக் ஆக்சிஜன் சிலிண்டரை கைப்பற்றி சுவாசிக்க முயற்சிக்கின்றனர். தன் மகனை காப்பாற்ற நயன்தாரா என்ன முயற்சி எடுக்கிறார்? இறுதியில் பேருந்துக்குள் இருந்தவர்களெல்லாம் காப்பாற்றப்பட்டார்களா? நயன்தாரா மகனுக்கு சிகிச்சை எடுக்கப்பட்டதா? என்பது தான் படத்தின் மீதி கதை.
முதன்மை கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் நயன்தாரா, தனது குழந்தைக்காக போராடும் காட்சிகளில் புலியாக நடித்திருப்பதோடு, தனது குழந்தையின் மீது காட்டும் அக்கறை, பாசம், பரிதவிப்பு என அனைத்து உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார். நயன்தாராவின் மகனாக யூடியூப் புகழ் ரித்விக் நடித்துள்ளார். முதல் படம் என்று சொல்ல முடியாத படி நடித்திருக்கிறார். நயன்தாரா கதாபாத்திரத்தை உணர்ந்து அளவான நடிப்பை கொடுத்துள்ளார்.
போலீஸ் அதிகாரியாக வரும் பரத் நீலகண்டன் வில்லனாக மிரட்டியிருக்கிறார். 'ஆடுகளம்' முருகதாஸ், ஆர்என்ஆர் மனோகர், ஷாரா, ஜாஃபர் இடுக்கி, சிபி புவன சந்திரன் உள்ளிட்டோரின் நடிப்பு படத்துக்கு பலம். விஷால் சந்திரசேகரின் பின்னணி இசையும், தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பெரிய பலம். மிக வித்தியாசமான கதைக்களத்தை மிக நேர்த்தியாக படமாக்கியிருப்பதால் படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை சீட் நுணியில் உட்கார்ந்து பார்க்க முடிவதோடு, தொழில்நுட்ப ரீதியாகவும் படம் மிரட்டுகிறது.
ஒளிப்பதிவாளர் தமிழ் ஏ.அழகனின் ஒளிப்பதிவு படத்தின் மிகப்பெரிய தூன். இப்படி ஒரு கதைக்களத்தை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்ததில் ஒளிப்பதிவாளர் மிகப்பெரிய வெற்றி பெற்றிருக்கிறார். மண்ணுக்குள் சிக்கியிருக்கும் பேருந்தின்சூழ்நிலையும், அதில் சிக்கிக்கொண்ட மனிதர்களின் மனநிலை மற்றும் உடல்நிலையில் நேரம் போக போக ஏற்படக்கூடிய மாற்றத்தை லைட்டிங் மற்றும் கலர் டோன் மூலம் மிக சிறப்பாக காட்டியிருக்கிறார். உயிருக்காக போராடும் பயணிகளின் மனநிலை திடீரென்று மாற்றமடைந்து அதனால் ஏற்படும் பாதிப்புகளை ஸ்டண்ட் இயக்குநர் ஏ.எஸ்.சுதேஷ் குமார், கதையின் போக்கு மாறாமல் காட்சிப்படுத்தியிருக்கிறார். இப்படி தொழில்நுட்ப கலைஞர்களின் உழைப்பு மற்றும் அவர்களது மெனக்கெடல் படம் முழுவதும் தெரிகிறது. அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் எழுதி இயக்கியிருக்கிறார். மிக சவாலான கதைக்களத்திற்கு சாமர்த்தியமான திரைக்கதை அமைத்திருப்பவர், எந்த இடத்திலும் ரசிகர்களின் கவனம் சிதறாத வகையில் காட்சிகளை கச்சிதமாக வடிவமைத்திருக்கிறார். ஒரு குறிப்பிட்ட இடத்தில் அதிலும் மண்ணுக்குள் புதைந்த பேருந்தில் நடக்கும் கதையை மிக சுவாரஸ்யமாகவும், விறுவிறுப்பாகவும் சொல்லிய இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷையும், அவரது புதிய முயற்சியையும் நிச்சயம் பாராட்டியாக வேண்டும்.
0 comments:
Post a Comment