ஊமைச் செந்நாய் திரை விமர்சனம்

 


LIFE GOES ON PICTURES  சார்பில் முருகானந்தம் மற்றும் வெங்கட் ராமன் தயாரிக்க, மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, கஜராஜ், ஜெயகுமார், அருள் சங்கர், சாய் ராஜ்குமார் நடிப்பில், மிஸ்கினின்  உதவியாளரான அர்ஜுன் ஏகலைவன் இயக்கி இருக்கும் படம் ஊமைச் செந்நாய். 


நீதி நேர்மை நியாயம் பார்க்காமல் பணத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்கிற தனியார் துப்பறிவாளர் ஒருவரின் (கஜ ராஜ்) கீழ் முக்கிய நபராக பணியாற்றும் ஒரு இளைஞன்(மைக்கேல் தங்கதுரை,) .


சட்டவிரோதமாக நடந்து கொண்ட உயர் அதிகாரியால் அநியாயமாக பழி சுமத்தப்பட்டு  மருத்துவம் பார்க்கத் தடை செய்யப்பட்ட அவனுக்கும்,  மெடிக்கல் ஷாப் ஊழியரான ஒரு பெண்ணுக்கும் ( சனம் ஷெட்டி) காதல். மனைவி சந்தேகப் படுவதாகக் கூறி – ஒரு நபரைப் பற்றி தகவல் திரட்டும்படி இந்த முன்னாள் டாக்டரிடம் சொல்கிறார் துப்பறிவாளர் . ஆனால்  காரணம் அது அல்ல . அமைச்சரின் முன்னாள் உதவியாளரான அந்த நபர் அமைச்சரின் எதிரிகளுக்கு அமைச்சர் பற்றிய  விசயங்களை சொல்வதாக அமைச்சருக்கு வந்த சந்தேகமே  உண்மைக் காரணம் .


தன்னிடம் உண்மையாக இல்லாத துப்பறிவாளரிடம்  இருந்து விலக நாயகன் முடிவு செய்ய , அதற்குள் அமைச்சரின் ஆட்களும்  காவல் துறையும் களம் இறங்க ,  அதன் பின்னால் நடக்கும்  துரோகம், துரத்தல், வலை , கொலை , மற்றும் அவற்றின் விளைவுகளே இந்தப் படம் . 


ஒரு தனித் தன்மையோடு வித்தியாசமான பாணியில் மிஸ்கின் பாதிப்போடு படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குனர் அர்ஜுன் ஏகலைவன்.


உதாரணமாக படத்தின் துவக்கத்தில் ஒரு நீண்ட ஷாட்டில் ஒரு உலோகப் பெண் முகம் மட்டும் போகஸ் செய்யப்பட்டு இருக்க, பின்னால் மொத்த சீனும் அவுட் ஆப் ஃபோகஸில் போகும் காட்சி . ரசனைதான் . ஆனால்  அது அளவுக்கு அதிகமாக நீள்கிறது . கரண்ட் கட் ஆகும் நொடி டக்கென்று உலோகமுகம் அவுட் ஆப் ஃபோகஸ் ஆகி முக்கியக் கதாபாத்திரங்களுக்கு  போகஸ் என்று மாற்றி  இருக்கலாம், 


எனினும் படம் முழுக்க நிதானமாக அடர்த்தியான படமாக்கலுக்கு முயன்று இருக்கும் இயக்குனர் கவனம் கவர்கிறார் . எல்லா காட்சிகளிலும் எதவாது ஒரு வகையில் பின்புலத்தில் தனித்தன்மை காட்டுகிறார். 


 கண்டைனர் சண்டைக்காட்சி , சோளக் காடு சண்டைக் காட்சி ஆகியவற்றில் இயக்குனர், ஒளிப்பதிவாளர், படத் தொகுப்பாளர்,  இசை அமைப்பாளர், சண்டை இயக்குனர் உட்பட எல்லோரும் சிறப்பான பங்களிப்பை தந்துள்ளார்கள் .


நடிக, நடிகையர் பயன்பாடு, பின்னணிக் குரல் சேர்ப்பு என்று எல்லா வகையிலும் ஒரு நேர்த்தியும் கவிதையும் வெளிப்படுகிறது. சபாஷ் . மைக்கேல் தங்கதுரை, சனம் ஷெட்டி, கஜராஜ், ஜெயகுமார், அருள் சங்கர், சாய் ராஜ்குமார் அனைவரும் நன்றாக நடித்துள்ளனர் , 


கல்யான் வெங்கட் ராமின் ஒளிப்பதிவில் வண்ணப் பயன்பாடு, இருள் – ஒளி ஆளுமை எல்லாம் மிக அருமை . சிவாவின் பின்னணி இசை மனசைத் துழாவுகிறது . 


அதுலின் படத் தொகுப்பு சில இடங்களில் மிக சிறப்பாகவும் சில இடங்களில் அதீத நீளம் அனுமதித்தும்.. இப்படி  இரண்டு விதமாகவும் இருக்கிறது. சரியான திரைக்கதை மட்டும் அமைந்து இருந்தால் படம் மிக சிறப்பாக வந்திருக்கும் . தனியார் டிடக்டிவ் என்ற விஷயத்தை வைத்துக் கொண்டு வீடு  கட்டி விளையாடி இருக்கலாம் . விட்டு விட்டார்கள். 


எனினும் படமாக்கலால் மனம் கவர்ந்து  பாராட்ட வைக்கிறது ஊமைச் செந்நாய்.

0 comments:

Pageviews