R.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் கிளாசிக் காமெடி படமான, “காசே தான் கடவுளடா”
மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில், இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் கிளாசிக் காமெடி படமான, “காசே தான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது ! இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு, இன்று ( 2021 ஜூலை 16) திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொள்ள, மிக எளிமையான பூஜையுடன் துவங்கியது.
இப்படத்தில் மிர்ச்சி சிவா முதன்மை கதாப்பாத்திரத்திலும், அவரது காதலியாக பிரியா ஆனந்த் அவர்களும் நடிக்கிறார்கள். சூப்பர் சிங்கர், குக் வித் கோமாளி புகழ் சிவாங்கி ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்கிறார். யோகிபாபு, ஊர்வசி கருணாகரன், தலைவாசல் விஜய், மனோபாலா உட்பட மேலும் பல முன்னணி நடிகர்களும் இப்படத்தில் நடிக்கிறார்கள். கண்ணன் இசையமைக்க, பாலசுப்பிரமணியம் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார்.
Masala Pix நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர், இயக்குநர் கண்ணன் கூறியதாவது...
மிகுந்த உற்சாகத்துடன் இன்று இப்படத்தின் படப்பிடிப்பை துவக்கியுள்ளோம். ஒரே கட்டமாக 45 நாட்களில் இப்படத்தின் படப்பிடிப்பை முடிக்கவுள்ளோம். நீண்ட கோவிட் பொதுமுடக்க காலத்திற்கு பிறகு தொழில் நுட்ப கலைஞர்களையும், நடிகர்களையும் ஒன்றாக பணியில் பார்ப்பது பெரும் மகிழ்ச்சியை தருகிறது. இன்னொரு புறம் தமிழின் எவர்கிரீன் கிளாசிக் காமெடி படமாக, மக்களின் மனதில் என்னென்றும் நிற்கும் “காசே தான் கடவுளடா” படத்தை அதன் தரம் சற்றும் குறையாமல் ரீமேக் செய்ய வேண்டிய கடமையுணர்வு உள்ளது.
தங்களது அற்புத நடிப்பு திறமை மற்றும் நகைச்சுவை உணர்ச்சியால் மக்களை மகிழ்விக்கும் நடிகர் குழு இப்படத்தில் இணைந்துள்ளார்கள். இந்த அட்டகாசமான நடிகர் குழுவுடன், திறமை மிகுந்த தொழில்நுட்ப குழுவும் இணைந்து இப்படத்தினை மிகச்சிறந்த படைப்பாக தருவோம் எனும் முழு நம்பிக்கை உள்ளது. குடும்பங்கள் இணைந்து கொண்டாடும் படைப்பாக, தியேட்டரில் சிரிப்பு மழை பொழியும் படைப்பாக, இப்படம் இருக்கும் என்றார்.
0 comments:
Post a Comment