இயக்குநர் ஷங்கர் - ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்
ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம்.
இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். 'ஜென்டில்மேன்', 'இந்தியன்', 'அந்நியன்', 'சிவாஜி', 'எந்திரன்', '2.0' என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம் சரண், இந்தப் படத்தின் மூலம் இந்திய அளவில் ஸ்டாராக வலம் வரவுள்ளார்.
ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனரான தில் ராஜு இந்த மெகா கூட்டணி இணைந்துள்ள படத்தைத் தயாரிக்கவுள்ளது குறித்து, "இந்திய அளவில் புகழ் பெற்ற இயக்குநரான ஷங்கருடன், இந்தியாவின் மிகச் சிறந்த நடிகர்களில் ஒருவரான ராம் சரண் இணைந்து பணியாற்றுவதில் மட்டற்ற மகிழ்ச்சி. தேசிய அளவில் இந்தியாவின் அத்தனை விதமான ரசிகர்களுக்குமான ஒரு பொழுதுபோக்குப் படத்தை நாங்கள் கொண்டுவரவிருக்கிறோம்" என்று தெரிவித்துள்ளார்.
இயக்குநர் ஷங்கர் - நடிகர் ராம் சரண் - தயாரிப்பாளர் தில் ராஜு இணைந்துள்ள இந்தப் படம் பிரம்மாண்டமாக தயாரிக்கப்பட்டு தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் ஒரே நேரத்தில் வெளியாகவிருக்கிறது. இது ராம் சரணின் 15வது திரைப்படமாகவும், ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் 50-வது மைல்கல் திரைப்படமாகவும் இருக்கும். தில் ராஜுவோடு சேர்ந்து ஷிரிஷ் அவர்களும் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.
படப்பிடிப்பு தொடக்க விவரம், ராம் சரணுடன் நடிக்கவுள்ளவர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகவுள்ளது.
0 comments:
Post a Comment