எனது நண்பனுடைய காதலியின் உயிரை பணயமாக வைத்தேன் - அப்புக்குட்டி

கொரோனாவால் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கிறோம்… நம் எல்லோரின் வேண்டுதலும் இப்போது, கொரோனா ஒழிய வேண்டும். எல்லோரும் லாக்டவுனில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதுதான். விரைவில் இது நடக்கும் என்று நம்புவோமாக…

கொரோனாவால் எல்லா தொழில்களைப் போல, திரைப்படத்தொழிலும் முடங்கித்தான் கிடக்கிறது. இக்காலகட்டத்தில் நமக்கிருந்த ஒரே பொழுதுபோக்கு சினிமாவும் சமூக ஊடகங்களும்தான்… பழைய சினிமாக்களை, உங்களுக்கு பிடித்த சினிமாக்களை, காமெடி க்ளிப்பிங்ஸ்குகளை ஆன்லைன் தளத்தில் பார்த்து பார்த்து ரசித்திருப்பிர்கள்… சிலர் சலித்தும் போயிருப்பீர்கள்… ஆன்லைனும் இல்லையென்றால் நமக்கு பைத்தியமே பிடித்திருக்கும்.

இச்சூழலில்தான் நான் நடித்துள்ள ‘ஒன்பது குழி சம்பத்’ என்ற திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15-ல் வெளிவருகிறது. அதுவும் ஆன்லைன் தளத்தில் வெளிவர இருக்கிறது.வீட்டில் முடங்கிக் கிடந்தாலும் உங்களை உயிர்ப்போடு வைத்திருந்தது சினிமாவும் உறவுகளும்தான். அந்த சினிமா வழியே உங்களை, உங்கள் வீட்டிற்கே வந்து இப்படத்தின் மூலம் சந்திக்க இருக்கிறேன்.

‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம், 80-20 பிக்சர்ஸின் திருநாவுக்கரசு தயாரிப்பில், யதார்த்த சினிமாக்களால் திரைக்குள் ஈர்க்கப்பட்டு, சரவண சுப்பையாவிடம் இணை இயக்குநராகப் பணியாற்றிய ஜா.ரகுபதி இயக்கத்தில், நான் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். இத்திரைப்படத்தில் நாயகனாக பாலாஜி அறிமுகமாகிறார். சசிகுமாரின் ‘கிடாரி’, கார்த்தியின் ‘தம்பி’ படத்தின் நாயகியான நிகிலா இப்படத்தில் கதாநாயகியாக நடித்திருக்கிறார். சூர்யா நடித்த ‘காதலே நிம்மதி’ படத்தின் இயக்குநர் இந்திரன், இதுவரை யாரும் பார்த்திராத வேடத்தில் வருகிறார்.

 இப்படத்திற்கு இசை சார்லி, ஒளிப்பதிவு கொளஞ்சி குமார், படத்தொகுப்பு தீனா...இத்திரைப்படம் கிராமத்தில் போக்கிரியாகத் திரிந்துகொண்டு, கோலி குண்டு விளையாடிக்கொண்டு திரியும் இளைஞனின் கதை. அவனுடைய வாழ்வில் ஒரு பெண் நுழைகிறாள்… அதனால் அவனுடைய வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? அப்பெண்ணின் வாழ்வில் ஏற்படும் மாற்றம் என்ன? என்பதை சொல்லும்படம் இது. சஸ்பென்ஸ் கலந்த த்ரில்லரோடு இப்படத்தின் கிளைமாக்ஸை முடித்திருக்கிறார் இயக்குநர் ஜா.ரகுபதி. இன்றளவும் சமூகத்தில் நடந்துகொண்டிருக்கிற அவலத்தை இப்படத்தில் மையக்கருத்தாக வைத்திருக்கிறோம்.

நிதர்சனமாகட்டும், சினிமாவாகட்டும் நண்பன் காதலிக்கிறானென்றால், தனது காதலை காதலியிடம் சொல்வதற்கு முன், நண்பனிடம்தான் சொல்லுவான். அவன் காதலை சேர்த்து வைக்க உயிரையும் பணயம் வைப்பான் அவனது நண்பன். நான் அவனது காதலியின் உயிரை பணயமாக வைக்கும், வெள்ளந்தி கிராமத்து நண்பனாக வருகிறேன்.

 இது சரி வரும்… இது சரிவராது என்று எடுத்துச்சொல்ல எல்லோருக்கும் ஒரு நண்பன் இருப்பான். இப்படத்தில் நாயகனுக்குச் சொல்லும் ஒரு டயலாக் இப்போதும் என்மனசுல மறக்காம இருக்கு… “உள்ளூர் பொண்ணும்… ஊரோரம் விளையுற நெல்லும் வீடு வந்து சேராது சம்பத்து…” என்று எடுத்துச்சொல்லுவேன். இப்படிப்பட்ட நண்பன் உங்கள் வாழ்விலும் நடமாடிக் கொண்டிருப்பான். அப்படி ஒரு நண்பனாக ‘சாமிநாதன்’ என்ற கேரக்டரில் நடித்திருக்கிறேன் என்பதைவிட, வாழ்ந்திருக்கிறேன் என்பதே உண்மை.

 படத்தைப் பாருங்க… ஆதரவு தாங்க…!

 இப்ப ஒரு சந்தேகம் உங்களுக்கு வரலாம்… புதுப்படம் வெளியாகிறது என்றால் அது திரையரங்கில்தானே… கொரோனா காலத்தில் இது எப்படி சாத்தியம் என்று கேட்டால்… தயாரிப்பாளர் சி.வி.குமார் அவர்கள் ரீகல் டாக்கீஸ் என்ற ஆப்ஸினை உருவாக்கி, அதை ஒரு ஆன்லைன் தியேட்டராக மாற்றி இருக்கிறார்.

இந்த ஆன்லைன் தியேட்டரில் வாரம் ஒரு புதுப்படம் வெளியாகும். அப்படம் வெளிவரும் சமயத்தில், ஆன்லைனில் டிக்கெட் வாங்கி, உங்கள் வீட்டிலேயே அமர்ந்து, ஒரு டிக்கெட்டில் குடும்பத்தினர் அனைவரும் கண்டு மகிழலாம். இதுதான் ஆன்லைன் தியேட்டர்.            ஆகஸ்ட் 15-அன்று காலை 9 மணிக்கு ரீகல் டாக்கிஸ் ஆப்ஸின், ஆன்லைன் தியேட்டரில் எங்களின் ‘ஒன்பது குழி சம்பத்’ திரைப்படம் வெளியாகிறது. ஆன்லைனில் டிக்கெட் வாங்கி படத்தைப் பாருங்க… நீங்கள் தரும் ஆதரவால், எங்களைப் போன்ற திரைக்கலைஞர்கள் வாழ்வு வளம் பெறும். தமிழ் சினிமா வளரும்.

0 comments:

Pageviews