Foresight Creations 3rd Anniversary Short Film & Senior Artiste Feliciation Gallery
குறும்படங்கள்,ஆவணப்படங்களின் மேம்பாட்டிற்காக தொடங்கப்பட்ட தொலைநோக்கு படைப்பகம் என்ற அமைப்பின் மூன்றாம் ஆண்டு விழா, சிறந்த குறும் படங்களுக்கு விருது வழங்கும் விழாவாகவும், மூத்த கலைஞர்களுக்கு பாராட்டு விழாவாகவும் சென்னையில் உள்ள பிரசாத் லேபில் நடைபெற்றது
.
இவ்விழாவில் இயக்குனர்கள் வசந்தபாலன், மீரா கதிரவன், சாமி, விக்கி, ஐந்து கோவிலான், ஒளிப்பதிவாளரும் நடிகருமான இளவரசு, தயாரிப்பாளரும் நடிகருமான ஜே செந்தில்குமார், நடிகர் நெல்லை சிவா, ‘டூலெட்’படப் புகழ் சந்தோஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இவ்விழாவில் மூத்த கலைஞர்களான வேலு தங்கம், அடடே மனோகர், ‘துரோணர்’ சண்முகம், வேம்பத்தூர் கிருஷ்ணன், சாம்பசிவம், எத்திராஜ், விவேக் பாரதி, ‘சைக்கிள்’ சுந்தரம் உள்ளிட்ட பல மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கி, கௌரவிக்கப்பட்டார்கள்.
இந்த குறும்பட விழாவில் 150க்கும் மேற்பட்ட குறும்படங்கள் பங்குபெற்றன. இதில் முதல் பரிசை ,இயக்குனர் வசந்த் பாலசுந்தரம் இயக்கத்தில் உருவான ‘அகம் திமிறி’ என்ற குறும்படத்திற்கும், இரண்டாவது பரிசை பாண்டியன் நன்மாறன் இயக்கத்தில் தயாரான ‘வீழும் மானுடம்’ என்ற குறும்படத்திற்கும், மூன்றாவது பரிசை பாரதி குமாரசாமி இயக்கத்தில் உருவான ‘ஜாதிகள் இருக்குதடி பாப்பா’ என்ற குறும்படத்திற்கும் வழங்கப்பட்டது.
அத்துடன் சிறந்த ஒளிப்பதிவாளராக நவீன் என்பவரும்,சிறந்த படத்தொகுப்பாளராக ஷான் என்பவரும்,சிறந்த இயக்குனராக லோகேஸ்வரன் என்பவரும்,சிறந்த குழந்தை நட்சத்திரமாக ஸ்ரத்தா என்பவரும், சிறந்த நடிகராக ‘பூ’ ராமு அவர்களும், சிறந்த நடிகையாக சரண்யா ராமச்சந்திரன் என்பவரும் தேர்ந்தெடுக்கப்பட்டு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.
இவ்விழாவினை மூத்த நடிகையான அங்கம்மா பாட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
அதனைத் தொடர்ந்து விழாவிற்கு தலைமை ஏற்ற இயக்குனர் வசந்தபாலன் பேசுகையில்,“ குறும்படங்களை பற்றிய ஒரு பார்வையாளனாக என்னுடைய கருத்தினை இங்கு பதிவு செய்ய விரும்புகிறேன். உலக படங்களுக்கும், தமிழில் வெளியாகும் குறும்படங்களுக்கும் என்ன வித்தியாசம் என்று பார்த்தால், தமிழ் படத்தினுடைய ஒளிப்பதிவு, ஒலிப்பதிவு, கலை இயக்கம், படத்தொகுப்பு, கதை தேர்வு,இசை என அனைத்திலும் ஏதேனும் ஒரு ஹாலிவுட் படத்தின் தாக்கம் இடம்பெற்றிருக்கிறது. பொதுவாக நம்முடைய இல்லங்களில் படுக்கை அறைகளில் ஒளி என்பது குறைவாக இருக்கும் அல்லது இல்லாமல் இருக்கும். ஆனால் தமிழில் வெளியாகும் அனைத்து குறும்படங்களிலும் படுக்கை அறை காட்சிகள் என்றால் அபிரிமிதமான ஒளி இருக்கும். கிடைக்கும் இயற்கை ஒளியை ஒருபோதும் நாம் பயன்படுத்துவதில்லை. செயற்கையான ஒளியை உண்டாக்கி தான், காட்சிகளை படமாக்குகிறோம். இதே சமயத்தில் எந்த குறும்படத்திலும் தமிழ் மக்களுடைய, தமிழ் மண்ணினுடைய கதை சொல்லப்படவில்லை, மக்களின் பிரச்சனைகளை பற்றி பேசவில்லை, காமம் பற்றியும், காதல் பற்றியும், வன்மம் பற்றியும் தான் மீண்டும் மீண்டும் குறும்படங்கள் தயாராகிறது.
இஸ்லாமிய நாடுகளில் திரைப்படம் எடுப்பதற்கு பல்வேறு நெருக்கடிகளும், இடையூறுகளும் இருக்கிறது. அங்கு படைப்பாளனுக்கு தன்னுடைய படைப்பை சுதந்திரமாக வெளிப்படுத்த வாய்ப்புகளே இல்லை. இருந்தாலும் அவர்கள் தங்களுக்குள்ள நெருக்கடியிலும் தங்களை பாதிக்கின்ற பிரச்சினைகளை குறும்படங்கள் மூலமாகவும், திரைப்படங்கள் மூலமாகவும் வெளிப்படுத்துகிறார்கள். உதாரணத்திற்கு டாக்ஸி என்ற படத்தை குறிப்பிடலாம். அரசாங்கம் எத்தனை தடைகள் விதித்தாலும், அதனால் மக்கள் சந்திக்கின்ற வேதனைகளை, வலியை படைப்பு மூலமாக =திரைப்படங்கள் மூலமாக வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.
ஈரானில் அரசியல் சார்பான படங்கள் எடுக்க முடியாது. ஆனால் அங்குள்ள படைப்பாளிகள், குழந்தைகளை வைத்து படங்களை எடுத்து, அதன் மூலமாக தங்களின் அரசியலையும், வேதனையையும் வெளிப்படுத்துகிறார்கள். கடுமையான சட்டங்கள் அடுத்தடுத்து ஏற்படுத்த படைப்பாளிகள் அதனூடாக தங்களது எதிர்ப்பை பதிவு செய்கிறார்கள். ஆனால் நாம் சட்டதிட்டங்களை தளர்த்தினால் படைப்பாளிகள் உடனடியாக ஆபாசத்தை படமாக்குகிறார்கள். தணிக்கை முறை இல்லை என்றால், நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற துணிச்சலுக்கு வந்துவிடுகிறோம். ஆனால் ஈரானிய படைப்பாளிகள் தங்களுக்கு எவ்வளவு கடுமையான சட்டதிட்டங்கள் இருந்தாலும், அதற்குள் தங்களுடைய வாழ்க்கையின் நெருக்கடிகளை, வாழ்க்கையில் சட்டதிட்டங்களை, தங்களுடைய படங்களில் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். உலக படங்களை பார்க்கும் பொழுது அந்த நாட்டைப் பற்றிய ஒரு பிம்பம் பார்வையாளனாகிய என்னுடைய மனதில் தோன்றுகிறது. பர்தா போட்ட ஒரு பெண்ணின் வலி நமக்கு புரிகிறது. நாம் உணர்கிறோம்.
ஆனால் நாம் என் மண்ணினுடைய அதாவது தூய தமிழ் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிட்டுவதே இல்லை. பார்க்க முடிவதில்லை. ஏதேனும் ஒரு மேற்கிந்திய சாயலுடன் தான் பார்க்க வேண்டியதிருக்கிறது. ஒரு நிஜமான தமிழ் சினிமாவை பார்க்கும் அனுபவம் இது வரை கிடைக்கவில்லை. நான் கூட அது போன்ற படங்களை எடுக்கவில்லை என்பதை ஒப்புக் கொள்கிறேன். நம்முடைய வாழ்க்கையின் அனுபவங்களை திரைப்படமாக முன்வைக்கிற பங்கு நம்மிடம் இல்லை. இதனை ஒரு படைப்பாளியாக வருத்தப்படுகிறேன். நம்முடைய வாழ்க்கையில் அழகிய அனுபவங்கள் ஏராளமாக கொட்டிக் கிடக்கின்றன.
இரண்டு மூன்று மாதங்களுக்கு முன் ஒரு உதவி இயக்குனர் என்னை சந்தித்து அவருடைய குறும்படத்தை வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்த குறும்படம் ஒரு பேய் படம். அவரிடம் குறும்படமாக ஏன் ஒரு பேய் படத்தை எடுத்தீர்கள்? என்று கேட்க வேண்டும் என்று எண்ணினேன். ஒரு குறும்படம் என்பது முழு நீள படத்தில் சொல்ல முடியாத விசயத்தை, சுருக்கமாகவும், துல்லியமாகவும் சொல்லுவதுதான் குறும்படம். குறும்படத்திற்கு எந்த ஒரு வணிக நெருக்கடியும் இல்லை என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும். இதனால் நீங்கள் சொல்ல வேண்டிய சொல்ல வேண்டிய விசயத்தை முழுமையாகவும், ஆணித்தரமாகவும் சொல்லிவிட வேண்டும். குறும் படத்தை பொருத்தவரை தணிக்கையும் கிடையாது. ஆனால் இங்கு குறும் படத்தை எடுக்கும் அனைத்து இளம் படைப்பாளிகளும் ஒரு முழு நீள திரைப்படத்தில் எந்த விஷயம் இடம் பெற வேண்டுமோ.. அதனையே குறும் படமாக எடுக்கிறார்கள். தற்பொழுது இணையத்தில் காணக் கிடைக்கிற அனைத்து குறும்படங்களும் ஹாரர், காமெடி, ஆக்சன், லவ் என்ற ஜேனரில் தான் இருக்கிறதே தவிர, தமிழ் மக்களின் நிஜமான துயரத்தை பிரதிபலிக்கும் ஒரு குறும்படத்தையும் காண முடிவதில்லை,
திருநெல்வேலியில் கந்து வட்டிக்காக ஒரு குடும்பமே தற்கொலை செய்து கொண்டது. அந்த குடும்பத்தினரின் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் கடந்த இரவு எப்படி இருக்கும் என்பதை யோசித்தால் நமக்கு அற்புதமான குறும்படமாக இருந்திருக்கும்.
விண்வெளிக்கு சென்று ஏவுகணை சோதனை நடத்தி வெற்றி பெற்றோம் என்று பீற்றிக் கொள்கிறோம். ஆனால் கழிவுநீர் தொட்டியில் சிக்கி குழந்தைகள் பலியாவதை தடுக்க வழி தெரியாமல் இருக்கின்றோம். இது என்றைக்காவது நாம் யோசித்துப் பார்த்திருக்கிறோமா...! இதுபோல் நாம் ஓராயிரம் விசயங்களை சொல்லிக்கொண்டே போகலாம். நாம் நிஜ வாழ்க்கையில் சந்திக்கின்ற, பார்க்கின்ற ஓராயிரம் விஷயங்கள், ஆயிரம் பிரச்சனைகளை சொல்ல நாம் மறுக்கிறோம். தமிழ் மக்களுக்கு தேவைப்படுகின்ற பிரச்சனைகளை சொல்லாமல் ஏதோ ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறோம். அதையே குறும்படமாகவும் எடுத்துக் கொண்டிருக்கிறோம். குறும்படத்திற்கு இருக்கின்ற சுதந்திரத்தை நாம் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் நாம் அதனை முழு நீள திரைப்படம் எடுப்பதற்கான ஒரு ஒத்திகை முயற்சியாகத்தான் அதனை பார்க்கிறோம். முதலில் இந்த எண்ணத்தில் இருந்து வெளியே வரவேண்டும். குறும்படத்தின் மூலம் ஆழமான விஷயங்களை அற்புதமான விஷயங்களை சொல்லிவிட முடியும். ஒரு நாவலில் சொல்ல முடியாத விசயத்தை தி ஜானகிராமன் அசோகமித்திரன் போன்றவர்கள் மிகச் சுருக்கமாகவும் தெளிவாகவும் சிறுகதையில் சொல்லியிருக்கிறார்கள். அது போன்று தான் குறும்படங்களும். திரைப்படங்களை போல் நீட்டி முழக்க வேண்டிய தேவையில்லை. சொல்ல வந்த விசயத்தை சுருக்கமாகவும் தெளிவாகவும் சொல்லிவிட முடியும். அனிதா நீட் தேர்வுக்கு முன் தற்கொலை செய்து கொள்வதற்கு முன் அவள் என்ன நினைத்துக் கொண்டிருந்தாள் என யோசித்தால், அற்புதமான குறும்படம் நமக்கு கிடைத்திருக்கும். முகிலன் ஏன் காணாமல் போனார்? ரயில்வே ஸ்டேஷனுக்கு சென்ற அவருக்கு என்ன ஆனது என யோசித்தால், அற்புதமான குறும்படம் நமக்கு கிடைக்க முடியும். ஸ்டெர்லைட் போராட்டத்தில் வாயில் குண்டடிபட்ட பெண் என்ன செய்து கொண்டிருந்தார் என யோசித்தால்... அற்புதமான குறும்படத்தின் மூலம் பதில் சொல்லிவிட முடியும். இப்படி ஆயிரம் விஷயங்கள் நம்மிடையே இருக்கிறது. இதையெல்லாம் விட்டுவிட்டு நாம் எதையோ ஒன்றை எடுத்துக் கொண்டிருக்கிறோம். இதனை நாம் தொடர்ச்சியாக இணையத்தில் பார்க்க வேண்டியதிருக்கிறது. குறும்படம் என்பது நம் வலியைச் சொல்லும் அற்புதமான ஆயுதம். அந்த வாள் இன்னும் யார் கையிலும் சிக்காமல் சுழன்று கொண்டிருக்கிறது. எடுத்து சுழற்றுங்கள். மிக அற்புதமான குறும்படங்கள், உலக தரத்திலான குறும்படங்கள் இங்கு கிடைக்கும்.” என்றார்.
இயக்குனர் மீரா கதிரவன் பேசுகையில்,“ நோக்கம் இல்லாத மனிதர்கள் இங்கு யாரும் இல்லை. மோடிக்கும் ஒரு நோக்கம் இருக்கிறது. நோக்கம் தொலைநோக்கம் கொண்டதாக இருக்கிறதா என்பது தான் பிரச்சினையாக இருக்கிறது. வணிக சினிமாவில் செய்து பார்க்க இயலாத, பல்வேறு கலை பரிசோதனைகளை குறும்படத்தில் செய்து பார்க்க வேண்டும். தமிழ்ச்சூழலில் குறும்படங்கள் தொடக்க கால கட்டத்தில் அப்படி தான் இருந்தது. லெனின் அவர்களின் இயக்கத்தில் வெளியான ‘நாக் அவுட்’என்ற குறும்படத்தை இதற்கு உதாரணமாக குறிப்பிடலாம். குறும்படங்களின் போக்கு நாளைய இயக்குனர்கள் என்ற ஒரு நிகழ்ச்சியின் மூலமாக திசை திரும்பியது
.
நான் ‘அவள் பெயர் தமிழரசி’ என்ற படத்தை இயக்கிய பிறகு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் சார்பில் குற்றாலத்தில் நடைபெற்ற குறும்பட பயிற்சி பட்டறையில் கலந்து கொண்டேன். அந்த பயிற்சிப் பட்டறையில் நான் கலந்து கொள்வதற்கு முன், நானும் ஒரு குறும்படத்துடனு வருவேன். அதனை திரையிட வேண்டும் என்று நிகழ்ச்சி அமைப்பாளர்களிடம் சொல்லிவிட்டு தான் சென்றேன். நிகழ்ச்சியின் மூன்றாவது நாளன்று என்னுடைய வேண்டுகோளை ஏற்று, நான் இங்கிருந்து எடுத்துச் சென்ற ‘விண்ட்’ என்ற குறும்படம் திரையிடப்பட்டது. அதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இந்த குறும்படத்தை நார்வே திரைப்பட விழாவில் திரையிடப்பட்டபோது, இயக்குனர் வெற்றிமாறன் அதனைப் பார்வையிட்டார். அதன் பிறகு அவர் இயக்குனர் மணிகண்டன் அவர்களுக்கு ‘காக்கா முட்டை ’ என்ற படத்தை இயக்குவதற்கான வாய்ப்பு வழங்குகிறார். இங்கு அனைவரும் வெற்றிமாறன் போல் இருக்கிறார்களா.. அவர்போல் அனைவரும் இருந்துவிட்டால் பிரச்சனையில்லை.
தமிழகத்தில் வெளியாகும் 99% படங்கள் மக்கள் சரியில்லை என்பதுதான் எடுக்கிறோம். ஆனால் மக்களுக்கான படங்களை நாம் எடுப்பதில்லை. ஆனால் மக்கள் நல்ல படங்களை பராசக்தி காலத்திலிருந்து, இன்றுவரை ஆதரவளித்து கொண்டுதான் இருக்கிறார்கள். மக்கள் கணக்கும் படைப்பாளனின் கணக்கும் ஒரு புள்ளியில் இணைந்து விட்டால் அந்தப் படைப்பு மிகப்பெரிய வெற்றியை பெறுகிறது. ஒரு பிரபலமான ற,நடிகரின் முகத்தை வைத்து தயாரிப்பாளர் வணிக சினிமாவை தயாரிக்கலாம். மக்களும் தங்களுக்கு பிடித்த நடிகர் என்பதால் அவருடைய முகத்திற்காக திரையரங்கிற்குள் வரலாம். ஆனால் திரையரங்கில் இரண்டு மணி நேரமும் அவருடைய முகத்தையே பார்த்துக் கொண்டிருக்க முடியாது. திரைக்கதையில் என்ன சொல்ல வருகிறார்கள் என்பதைத்தான் மக்கள் பார்க்கிறார்கள். தமிழ் சினிமாவில் ஏராளமான வியாபார சிக்கல்கள் இருக்கின்றன. கும்பளாங்கி நைட்ஸ் என்ற மலையாளப் படம் சென்னையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த படத்தின் வெற்றிக்கு காரணம்,அது மலையாள மக்களின் கலாச்சாரத்தை அவர்களின் பேச்சு மொழியை பிரதிபலிப்பது தான். இதனை அங்குள்ள உச்ச நட்சத்திரமான ஃபகத் பாசில் தயாரிக்கிறார். அந்தப் படத்தில் ஒரு சிறிய எதிர்மறை கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்கிறார். தமிழ்ச்சூழலில் இது சாத்தியமா..? இங்குள்ள குறும்படங்கள் தமிழ் கலாச்சாரத்தை சொல்வதில்லை. மிகச் சில படங்களே வெளியாகியிருக்கின்றன.
மற்ற இடங்களிலும், நாடுகளிலும் அரசியல் தனியாக இருக்கும். தொலைக்காட்சி அலைவரிசை தனியாக இருக்கும். கட்சி தனியாக இருக்கும். ஜாதி தனியாக இருக்கும். ஆனால் நம் தமிழ் சினிமாவில் இவை அனைத்தும் ஒன்றாக இணைந்திருக்கிறது. இங்கு ஒரு அரசியல் கட்சியை எதிர்த்து ஒரு வசனத்தைக் கூட வைக்க இயலாது. கருத்து சுதந்திரம் என்பது கூடவே கூடாது. ஆனால் இது ஜனநாயக நாடு. எல்லாமே பேசலாம். இவை மாற வேண்டும். இதனை குறும்படங்கள் மூலம் செய்து காட்ட இயலும்.
கடைக்குட்டி சிங்கம் போன்ற நம் மக்களின் வாழ்க்கைகளை செல்லும்போது அந்த படம் வெற்றி அடைகிறது. ஏனெனில் தற்போது வெளியாகும் பல படங்கள் தமிழ் மக்களின் வாழ்க்கையை பிரதிபலிப்பதில்லை என்று திரையரங்கு அதிபர் ஒருவர் சொன்ன கருத்தை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். உலக சினிமாவை பற்றிய தவறான பார்வை நம்முடைய இளம் படைப்பாளிகளிடம் இருக்கிறது ஆகவே இளம் படைப்பாளிகள் தங்களது பார்வைகளை மாற்றி அமைத்துக் கொண்டு, நல்ல தரமான குறும்படங்களை வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மூத்த கலைஞர்களை பற்றி பேசுவது குறைந்து கொண்டே வருகிறது . அவர்களுக்கு உரிய மரியாதையை, கௌரவத்தை அளித்த தொலைநோக்கு பெட்டகத்தை நான் மனதார பாராட்டுகிறேன்.” என்றார்
நடிகர் இளவரசு அவர்கள் பேசுகையில்,“ மூத்த கலைஞர்களை ஒருபோதும் நலிந்த கலைஞர்கள் என்று அழைக்காதீர்கள். ஏனென்றால் அவர்கள் இந்த வயதிலும் சாதிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை கொண்டிருக்கிறார்கள்.”என்றார்.
நடிகர் நெல்லை சிவா பேசுகையில்,“ நானும் ஒரு குறும்படம் என்பதற்காகத்தான் நெல்லையிலிருந்து சென்னைக்கு வந்தேன். அந்த காலகட்டத்தில் நான் குறும்படம் எடுக்க இருக்கிறேன் என்றால், சிரிப்பார்கள். நான் சிவாஜி சாரின் ரசிகன். எங்க ஊரில் உள்ள மக்கள் மின்சார கட்டணத்தை கட்டுவதற்காக கொடுத்த பணத்தை எடுத்துக்கொண்டு, யாருக்கும் தெரியாமல் சென்னைக்கு வந்து விட்டேன். ஆனால் சென்னைக்கு வந்து பலரால் ஏமாற்றப்பட்டு, பிறகு நடிகனாகி விட்டேன். வீரபாண்டிய கட்டபொம்மன் நெல்லை மண்ணை சார்ந்தவர். அவர் நெல்லை மண்ணின் பேச்சு மொழியில் தான் பேசியிருக்க வேண்டும் என்று எண்ணி, வீரபாண்டிய கட்டபொம்மனின் வாழ்க்கையை குறும் படமாக உருவாக்க நினைத்தேன். ஆனால் காலம் கடந்த பிறகு வாய்ப்புகள் வருகிறது. இதனை எண்ணி மனதிற்குள் சிரித்துக் கொண்டிருக்கிறேன். அனைவருக்கும் நன்றி.’’ என்றார்
நடிகர் சந்தோஷ் அவர்கள் பேசுகையில்,“ ஒவ்வொரு இளம் படைப்பாளிகளும் தங்களது பெயர் நிலைத்திருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் குறும் படத்தை எடுக்கிறார்கள். அவர்களுக்கு அந்த குறும்படம் காலம் கடந்தும் பெயர் பெற்று தருகிறதா..? என்பதை ஒருமுறைக்கு இருமுறை சிந்திக்க வேண்டும். ஒரு குறும்படத்தை இயக்குகிறோம். அந்தக் குறும்படத்தை 5 ஆண்டுகளுக்குப் பிறகு, அதை இயக்கிய நீங்களே பார்க்க முடிகிறதா? என்பதை ஒரு முறை எண்ணிப் பார்க்க வேண்டும். இயக்குனர் என்று பெயர் போட்டால், அதற்குப் பின்னால் எவ்வளவு உழைப்பு இருக்க வேண்டும் என்பது குறித்து அவர்களே சிந்திக்க வேண்டும். தொழில்நுட்பக் கலைஞர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார்கள். ஆனால் இயக்குனர் என்பவர் பயிற்சி எடுத்துக் கொண்டு வருகிறார்களா...! என்பதுதான் கேள்வியாக இருக்கிறது. எமக்கும் ஒரு தயக்கம் இருக்கிறது. இயக்குனர் என்று டைட்டில் கொடுத்து விட்டு படத்தை இயக்க முடியுமா என்ற தயக்கம் இருக்கிறது. ஏராளமான தமிழில் வெளியாகும் பல குறும்படங்கள் சோகமான முடிவை மட்டுமே கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழ்ச் சூழலில் சோகம் மட்டுமே இல்லை. பல்வேறு உணர்வுகள் இருக்கிறது. சந்தோஷம் இருக்கிறது. கொண்டாட்டங்கள் இருக்கிறது. வாழ்க்கையில் இருந்து இயல்பாக பல விஷயங்களை எடுத்து குறும்படமாக்கலாம். கி ராஜநாராயணனின் முதல் காதல் என்பது குறும்படமாக எடுப்பதற்கு நல்லதொரு சிறுகதை .ஒரு குறும்படத்தை எடுக்கும்போது இயக்குனர் என்று நாம் பெயரிடுகிறோம் அந்தப் பெயர் நம்முடைய காலத்துக்குப் பிறகும் நீடித்திருக்கும். நாம் சொத்துக்கள், நம் உடைமைகள் அனைத்தும் நான் இறந்தபிறகு வேறு ஒருவருடைய பெயருக்கு மாறிவிடும். ஆனால் நாம் உருவாக்கிய குறும்படங்கள் மட்டும் என்றென்றைக்கும் நம் பெயரை சொல்லிக் கொண்டிருக்கும். அதனால் நாம் உருவாக்கும் குறும்படங்களை கூட தரமானதாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
மூத்த கலைஞர்களை அங்கீகரிப்பதும், அவர்களின் வழிகாட்டுதலை பெறுவதும், தமிழ்ச்சூழலில் குறைந்து வருகிறது. ஆனால் அண்டை மாநிலமான ஆந்திரம் மற்றும் கேரளாவில் அவர்களை கொண்டாடுகிறார்கள். உரிய முறையில் அங்கீகாரம் அளித்து வருகிறார்கள். அந்த வகையில் தொலைநோக்கு படைப்பாகும் செய்யும் இந்த பணியை மனதார பாராட்டுகிறேன்.”என்றார்.
நிழல் திருநாவுக்கரசு பேசுகையில்,“ குறும்படம் எம் மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். நாங்கள் நடத்தும் குறும்பட பயிற்சிப் பட்டறையில் கிருஷ்ணகிரியில் இருந்து ஒருவர், கலந்து கொண்டு ‘விடியுமா..?’ என்ற பெயரில்ஒரு குறும் படம் எடுத்தார். இந்த குறும்படத்தில் அவர் வசிக்கும் பகுதியில் மகப்பேறு மருத்துவமனை கிடையாது. யாரேனும் பிரசவ வலி எடுத்து விட்டால், அப்பெண்ணை கட்டிலில் கட்டி ஏழு கிலோமீட்டர் மலையில் இருந்து கீழே இறங்கி வர வேண்டும். இதை வைத்து தான் அந்தக் குறும்படத்தை இயக்கி இருந்தார். இந்த குறும்படத்தை பார்வையிட்ட அம்மாவட்ட ஆட்சியர், உடனடியாக 40 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அங்கு ஒரு மகப்பேறு மருத்துவ மனையை கட்டுவதற்கான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டார். இதை நாங்கள் மிகப்பெரிய வெற்றியாக கருதுகிறோம். அதேபோல் ராமநாதபுரத்தை சேர்ந்த ஒருவர்,அவருக்கு பார்வை இல்லை என்றாலும், மரம் ஏறுவதில் வித்தகர். அவரைப் பற்றி ‘அக விழி’ என்ற பெயரில் பாண்டிசேரியைச் சேர்ந்த எம் எஸ் பாண்டியன் என்பவர் ஒரு குறும்படம் எடுத்து திரையிட்ட போது, அந்த விழாவுக்கு வந்திருந்த விருந்தினர்கள் 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் அவருக்கு நிதியுதவி அளித்து கௌரவப்படுத்தினார்கள். இதுபோல் பலநல்ல விஷயங்களை குறும்படங்கள் சாத்தியப்படுத்தும்.
தமிழில் திரைப்படங்கள் எடுப்பதற்கு முன் ‘புத்திமான் பலவானாவான்’ என்ற பெயரில் என் எஸ் கிருஷ்ணன் நடிப்பில் குறும்படம் தான் எடுத்திருக்கிறார்கள். குறும்படத்தின் மூலமாக தான் தற்போதைய பெரிய படங்கள் உருவாகியிருக்கிறது என்பதை நான் குறிப்பிட விரும்புகிறேன். தற்போது விஸ்காம், மாஸ் காம் என ஏராளமான துறைகள் இருக்கிறது. இதில் பயிலும் மாணவர்கள் ஒரு குறும் படத்தை எடுக்க வேண்டும் என்பது பாடமாக இருப்பதால் ஏராளமான குறும்படங்கள் உருவாகின்றன. 1999 ஆம் ஆண்டில் நான் குறும்படங்களை திரட்டி ‘சொல்லப்படாத சினிமா’ என்ற பெயரில் நூலாக வெளியிடும் போது, தமிழில் 15 குறும்படங்கள் தான் வெளியாகி இருந்தது. இந்த நூல் தான் இந்தியாவில் முதன்முதலாக குறும்படங்கள் மற்றும் ஆவண படங்களுக்கான நூல். அந்தக் காலகட்டத்தில் மூன்று நிமிட குறும்படம் எடுப்பதற்கு 75,000 ரூபாய் செலவாகும். அதற்குப் பிறகு தற்போது டிஜிட்டல் கேமராக்கள் வந்த பிறகு குறும்படங்கள் எடுப்பது எளிதாகிவிட்டது. இன்றைய தேதியில் நம்முடைய இளைஞர்கள் எடுக்கும் குறும்படங்கள் சர்வதேச தரத்தில் அமைந்திருக்கிறது.
தற்போது இந்தப் போட்டிக்கு நூற்றி ஐம்பது திரைப்படங்கள் குறும்படங்கள் கலந்து கொண்டன. அனைத்து குறும்படங்களையும் நாங்கள் பார்வையிட்டோம். எந்த ஒரு குறும்படங்களாக இருந்தாலும் எடுப்பு, தொடுப்பு, முடிப்பு என்ற கட்டமைப்பை கொண்டிருக்க வேண்டும். ஆனால் பல குறும்படங்கள் இந்த கட்டமைப்பை கொண்டிருக்கவில்லை. அத்துடன் பல குறும்படங்களின் பின்னணி இசை, இணையத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்டதாக இருந்தது. இன்றைய சூழலில் சினிமாவில் சொல்லப்படாத, சொல்ல முடியாத பல விஷயங்களை குறும்படங்கள் சொல்லி இருக்கின்றன. இதில் லோகேஸ்வரன் என்ற இயக்குனர், ‘மோமோ’ என்ற மென்பொருளை வைத்து எத்தனை வகையான விளையாட்டுகளை உருவாக்க முடியும் என்பதைக் குறித்து குறும்படத்தை இயக்கி இருந்தார். இது போன்ற புதிய கருத்துகள் தமிழ் சினிமாவை மென்மேலும் உயர்த்தும். இதுபோன்ற விஷயங்கள் சினிமாவுக்கும் முன்னதாகவே குறும் படங்களில்தான் வெளியாகியிருக்கிறது. இது குறும்படங்களுக்கு கிடைத்த பெருமை.” என்றார்
இதனைத் தொடர்ந்து குறும்படப் போட்டியில் வெற்றி பெற்ற குறும்படங்கள் குறித்தும், சிறந்த நடிகர், நடிகை ,தொழில்நுட்ப கலைஞர்கள், குறித்த விவரங்களையும் தொலைநோக்கு படைப்பாக்கத்தின் நிர்வாகியான அருண்மொழி அறிவித்தார்.
'அகம் திமிறி'என்கிற வசந்த் பாலசுப்ரமணியம் இயக்கிய குறும்படம் முதல் பரிசு பெற்றது. 'வீழும் மானுடம் 'என்கிற பாண்டியன் நன்மாறன் இயக்கிய படம் இரண்டாவது பரிசு பெற்றது. மூன்றாவது பரிசை 'ஜாதிகள்இருக்குதடி பாப்பா 'பெற்றது. இதை இயக்கியவர் பாரதி குமாரசாமி
குறும்படங்கள் மட்டுமல்ல சிறந்த நடிகர் ,நடிகை ,ஒளிப்பதிவாளர், இயக்குநர் என்று அனைத்துப் பிரிவுகளிலும் சிறந்தவற்றுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
0 comments:
Post a Comment