ஆம்பூரில் நடைபெற்ற பெண்களுக்கு அதிகாரமளித்தல் நிகழ்ச்சியில் ஐக்கிய அரபு நாடுகளின் இளவரசி பங்கேற்பு


ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் பழமைவாய்ந்த அனைக்கர் கல்விக் குழுமம் சென்னை மற்றும் ஆம்பூரில் 6 பள்ளிகள், ஒரு மருத்துவமனை உள்ளிட்ட நிறுவனங்களை நடத்திவருகிறது. இக்கல்விக் குழுமம் சார்பில் பெண்களுக்கு அதிகாரம் அளித்தலுக்கான பெரும் நிகழ்ச்சி வெள்ளி அன்று நடைபெற்றது. இதில் அரபு நாட்டு இளவரசி ஹெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸம் உரையாற்றினார். மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 5000 பேர் முன்னிலையில் உரையாற்றினார்.

இளவரசி ஹெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸம் பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதிவருகிறார். சர்வதேச இதழ்களில் பங்களித்து வருகிறார். விற்பனையில் சாதனை படைத்த நூல்களையும் எழுதி உள்ளார். தி பிளாக் புக் ஆஃப் அரேபியா என்ற இவருடைய நூலை ப்ளூம்ஸ்பரி வெளியிட்டுள்ளது. லக்ஸுரி பேஷன் என்ற இதழின் ஆசிரியராகவும் இருந்துவரும் இளவரசி, தொண்டு நிறுவனங்களிலும் பங்காற்றி வருகிறார்.

அனைக்கர் கல்வி அறக்கட்டளை குறித்து இளவரசி பெருமை பொங்க உரையாற்றினார். மேலும் அவர் பேசும்போது, பெண்கள் மற்றும் ஆண்களின் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றார். வளர்ச்சி பெற்றவர்கள் வளரவேண்டியவர்களை கைத்தூக்கிவிட வேண்டும். ஐக்கிய அரபு மிகவும் ஏழைநாடு; 40 வருடங்களுக்கு முன்பு. ஆனால் தற்போது பணக்கார நாடாக வளர்ச்சி அடைய என்ன காரணம் என்று நினைக்கிறீர்கள் நிச்சயமாக எண்ணெய் வளம் இல்லை. கல்வி மட்டும்தான் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு காரணம். குழந்தைகளுக்கு நல்ல கல்வியை அளிப்பதே சந்ததிகளின் வளர்ச்சிக்கு ஒரே வழி. தாய்மார்களைக் கண்டு நான் பெருமை அடைகிறேன். பெண்குழந்தைகளின் கல்விக்கு துணைநிற்கும் நிலைப்பாட்டை வரவேற்கிறேன் என்று இளவரசி கூறினார்.

அனைக்கர் அறக்கட்டளை செயலாளர் முகமது அனைக்கர் கூறும்போது, 60 ஆண்டு பழைமை வாய்ந்தவர்கள் நாங்கள். பள்ளிகள் மூலமாக இலவச கல்வி, கல்வி மானியம், கல்வி உதவித் தொகை வழங்கி வருகிறோம். 6 பள்ளிகளில் 2 பள்ளிகள் இலவச கல்வி வழங்கிவருகிறது. இதுவரை ஒரு லட்சம் மாணவர்கள் பயன்பெற்று இருக்கிறார்கள். எங்களுடைய கல்வி நிறுவனத்தில் ஸ்மார்ட் வகுப்பறைகள், வசதி வாய்ந்த ஆய்வுக்கூடங்கள், போக்குவரத்து வசதி, முழுமைப்பெற்ற நூலகம் உள்ளது. பாதுகாப்பான கல்விச் சூழலை மாணவ, மாணவிகளுக்கு ஏற்படுத்திக்கொடுக்கப்பட்டு உள்ளது. அதன்காரணமாக மாவட்ட, மாநில அளவில் மாணவர்கள் சாதனை படைத்து வருகிறார்கள்.

நல்ல மதிப்பெண் பெறும் மாணவிகளுக்கு இலவச நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது. நீட் தேர்வில் வெற்றி பெறுபவர்களின் விடுதி உள்ளிட்ட முழுமையான கல்விச் செலவை நமது நிறுவனமே ஏற்றுக்கொள்கிறது.

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதின் முக்கியத்துவம் குறித்தும் முகமது அனைக்கர் பேசினார். வாழ்க்கையில் வளர்ச்சி அடைவதற்கு கல்வி மிகவும் முக்கியம் என்பதை பெண்கள் பெரிதாக உணரவில்லை. அதனால் பல்வேறு பிரச்சனைகளையும், சவால்களையும் குழந்தை பருவத்தில் இருந்தே அவர்கள் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பொதுமக்கள் மத்தியில் இதுபோன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதன் மூலமே மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த முடியும். பெண்களும் அடிமைச் சிறையில் இருந்து வெளிவர முடியும் என்று முகமது அனைக்கர் தெரிவித்தார்.

அனைக்கர் கல்விக் குழுமத்தில் சிறந்த பணி ஆற்றியவர்களுக்கு அரபு நாட்டு இளவரசி ஹெய்கா ஹெண்ட் பைசல் அல் குவாஸம் விருதுகளை வழங்கி கவுரவித்தார். முஜுபுனிசா, நசீமா சுல்தானா, நஸ்ரீன் பேகம், ஷேக் அப்துல் நாசர் ஆகியோர் இளவரசி கரங்களால் சிறந்த சேவைக்கான விருதுகளை பெற்றனர். வி.என்.கலீலுல்லாவுக்கு இந்தியாவின் பசுமை மனிதர் திரு அப்துல்கனி ரொக்கப் பரிசு வழங்கி கவுரவித்தார். நிகழ்ச்சியில் அனைக்கர் கல்வி அறக்கட்டளை மூத்த அறங்காவலர் என்.முகமது ஸக்ரியா, அறக்கட்டளை தலைவர் அனைக்கர் ஷபீக் அகமது ஆகியோர் பங்கேற்றனர்.

0 comments:

Pageviews