பிரபல முன்னணி இயக்குநர் பூரி ஜெகன்னாத், பன்முகத் திறமை கொண்ட நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து பான் இந்திய அளவிலான படத்தை உருவாக்க உள்ளார். இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் தற்போது முடிவடைந்துள்ள நிலையில், விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. தயாரிப்பாளர்கள் இப்படத்தில் பங்குபெறும் நட்சத்திர நடிகர்களின் பட்டியலை வெளியிடத் தொடங்கியுள்ளனர், முக்கிய நடிகர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்தி, படத்தை சுற்றிய ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகின்றனர்.
மிகப்பிரம்மாண்ட படைப்பாக உருவாகும் இப்படத்தை, பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் சார்பில், பூரி ஜெகன்னாத் தயாரிக்கிறார். சார்மி கவுர் இப்படத்தை வழங்குகிறார், மேலும் JB மோஷன் பிக்சர்ஸின் ஜேபி நாராயண் ராவ் கோண்ட்ரோலா இணைந்து வழங்கிறார். JB மோஷன் பிக்சர்ஸுடனான இந்தக் கூட்டணி, படத்தின் தொலைநோக்குப் பார்வையிலான முயற்சியையும், பிரம்மாண்டத்தையும் மேலும் அதிகப்படுத்தும்.
இயக்குநர் பூரி ஜெகநாத், படத்தின் ஒவ்வொரு விவரத்தையும் மிக நுணுக்கமாக வடிவமைத்து வருகிறார். திரைக்கதை எழுதுவதிலிருந்து நடிகர் தேர்வு வரை, நாடு முழுவதும் உள்ள பார்வையாளர்கள் இப்படத்தை ரசிக்கும் வகையில், இப்படத்திற்காக ஒவ்வொன்றையும் கவனமாக செதுக்கி வருகிறார்.
இந்தப் படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக சம்யுக்தா கதாநாயகியாக நடிக்கிறார், தபு மற்றும் விஜய் குமார் ஆகியோர் முக்கியமான வேடங்களில் நடிக்கின்றனர்.
இந்திய முழுவதுமுள்ள ரசிகர்கள் ரசிக்கும் வகையிலான படைப்பாக உருவாகும், இந்த பான் இந்தியஎண்டர்டெயினர் திரைப்படம், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
இப்படாம் மற்ற தகவல்கள் ஒவ்வொன்றாக விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
நடிகர்கள்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு, விஜய்குமார்.
தொழில்நுட்பக் குழு
எழுத்து, இயக்குநர் : பூரி ஜெகன்நாத்
தயாரிப்பாளர்கள்: பூரி ஜெகன்நாத், சார்மி கௌர்
தயாரிப்பு நிறுவனம் : பூரி கனெக்ட்ஸ்
CEO : விசு
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெடிங் : ஹேஷ்டேக் மீடியா
கான்ஸ் திரைப்பட விழாவில் வெற்றி பெற்ற “All We Imagine As Light” படத்தின் நடிகர் ஹிர்து ஹாரூன், “டெக்ஸாஸ் டைகர்” படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.
சமீபத்தில் வெளிவந்து, உணர்வுப்பூர்வமான கமர்ஷியல் படைப்பாக, விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமும் நல்ல வரவேற்பைப் பெற்ற, “ஃபேமிலி படம்” படத்தின் இயக்குநர் செல்வகுமார் திருமாறன் இப்படத்தினை எழுதி இயக்குகிறார்.
“ஃபேமிலி படம்” படத்தை தயாரித்த “UK Squad” எனும் நிறுவனத்தின் கீழ் சுஜித், பாலாஜி குமார், பாரதி குமார் மற்றும் செல்வகுமார் திருமாறன் ஆகியோர் இணைந்து “டெக்சாஸ் டைகர்” படத்தையும் தயாரிக்கின்றனர்.
படக்குழு, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களைப் பற்றிய சுவாரஸ்யமான அப்டேட்டுகள் விரைவில் ஒவ்வொன்றாக அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.
அரிஜித் சிங், மிதூன் மற்றும் மோஹித் சூரி என மூவரும் நாளை வெளியாகவுள்ள சையாராவின் அடுத்த பாடலான 'துன்' பாடலுக்காக மீண்டும் இணைந்துள்ளார்கள். இந்த மூவரும் ஹிந்தி திரைப்படத்துறையில் வரலாற்று அளவில் வெற்றி பெற்ற பாடல்கள் சிலவற்றை உருவாக்கியுள்ளனர்.இதில் ஆஷிகி 2 படத்திலிருந்து 'தும் ஹி ஹோ' பாடலும் அடங்கும்.மேலும், இந்த கூட்டணியில் உருவாகும் இசைக்காக மக்கள் தங்கள் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை மோஹித் விரும்புகிறார்.
மோஹித் கூறுகையில், “நட்சத்திரங்கள் இணையும்போது, ஆச்சரியங்கள் நிகழும் என்பார்கள். என் வாழ்க்கையில் முதலில் மிதூனையும் பின்னர் அரிஜித் சிங்கையும் கொண்டு வந்ததற்கு நான் நட்சத்திரங்களை பாராட்டுகிறேன்.ஏனென்றால் நம் நாட்டின் வாழ்நாளில் ஒரு முறை மட்டுமே காணக்கூடிய இந்த இரண்டு இசை கலைஞர்களுடன் எனது சிறந்த இசையை உருவாக்கும் அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்தது.”
மிதூனுடன் 2 தசாப்தங்களுக்கும் மேலாக நீடிக்கும் அவரது அற்புதமான இசைப் பயணத்தைப் பற்றி மோஹித் கூறுகையில், “மிதூனும், நானும் 2005ம் ஆண்டில் ஜெஹர் & கல்யுக் திரைப்படத்தில் இசையமைத்ததிலிருந்து எங்கள் பயணம் தொடர்கிறது. மிதூனை அறிந்து, அவருடன் இசையை உருவாக்கி, அவரது புத்திசாலித்தனமான மனதைப் பாராட்டி 20 ஆண்டுகள் ஆகிறது. 2005ம் ஆண்டில் இருந்து, மிதூனும் நானும் மர்டர் 2, ஆஷிகி 2, ஏக் வில்லன், ஹமாரி அதுரி கஹானி, ஹாஃப் கேர்ள்ஃப்ரெண்ட், மலாங், இப்போது சையாரா .எங்கள் படைப்புகளைப் பார்ப்பதில் நம்பமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியடைகிறோம், குறிப்பாக நாங்கள் ஒன்றாக உருவாக்கிய காதல் பாடல்கள்” .
“எனவே, மிதூனும் நானும் இணையும் போதெல்லாம், ஒரு சிறந்த பாடலை வழங்க எங்களிடமிருந்து பெரிய எதிர்பார்ப்புகள் இருக்கும்.மேலும் அந்த அழுத்தத்தை நாங்கள் அனுபவிக்கிறோம். இந்த எதிர்பார்ப்பு தான் புதிதாக ஒன்றை உருவாக்க எங்களை தூண்டுகிறது.பேசப்பட வேண்டிய மக்களால் விரும்பப்படும் ஒரு பெரிய பாடலை வழங்க எங்களை தூண்டுகிறது.”
இந்திய சினிமாவில் சிறந்த பாடகராகக் கருதப்படும் அரிஜித் சிங்குடனான அவரது ஒத்துழைப்பைப் பற்றி மோஹித் கூறுகையில் , “அரிஜித் சிங் இந்த வாழ்நாள் முழுவதும் போற்றத்தக்க அற்புதமான நினைவுகளைத் தந்த ஒரு பாடகர். ஆஷிகி 2 இன் தும் ஹி ஹோ, சாஹுன் மைன் யா நா, ஹம் மர் ஜாயேங்கே போன்ற பாடல்களிலிருந்து ஏக் வில்லனில் ஹம்டார்ட் வரை, ஹமாரி அதுரி கஹானி டைட்டில் டிராக் , ஹாஃப் கேர்ள்ஃபிரண்டில் ஃபிர் பி தும்கோ சாஹுங்கா , மலாங்கில் சல் கர் சாலன் வரை அரிஜித் பாடிய பாடல்கள் மட்டுமல்ல, அவை என் இதயத்தின் துண்டுகள்”.
நாங்கள் மூவரும் ஒன்றாக இணையும்போது மக்கள் பெரும் எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பார்கள் என்றும், சையாராவில் அந்த அழுத்தத்தை அவர் அனுபவிக்கிறார் என்றும் மோஹித் கூறுகிறார்.
"இயற்கையாகவே, மிதூனும் அரிஜித்தும் நானும் ஒன்றாக இணையும்போது, மக்கள் மறக்க முடியாத ஒரு பாடலைக் தருவோம் என எதிர்பார்கின்றனர் என்பதை நாங்கள் அறிவோம், அந்த எதிர்பார்ப்பை நாங்கள் விரும்புகிறோம். நாங்கள் மூவரும் மீண்டும் சையாரா படத்தில் இடம்பெற்ற துன் பாடலுக்காக இணைகிறோம்.இது எங்களுக்கு நம்பமுடியாத அளவிற்கு சிறப்பு வாய்ந்த பாடல். பிரபஞ்சம் எப்படியோ எங்கள் மூவரையும் ஒவ்வொரு முறையும் ஒன்றிணைத்து மிகவும் எளிமையான மிகவும் சக்திவாய்ந்த உணர்ச்சிபூர்வமான பாடலை உருவாக்குகிறது, "
துன் பாடலைப் பற்றி அவர் மேலும் கூறுகையில், "துன் என்பது காதல் வாழ்க்கையில் போராட்டத்தைக் கொண்டாடும் ஒரு பாடல், மேலும் உண்மையான போராட்டம் யாருக்கும் அனைத்து தடைகளையும் கடக்க உந்துதலை வழங்கும். துன் என்பது ஒருபோதும் கைவிடாத உணர்வு ,எல்லோரும் அதை விரும்புவார்கள் என்று நம்புகிறோம்."
மிகவும் எதிர்பார்க்கப்படும் காதல் படமான சையாரா , காலத்தால் அழியாத காதல் கதைகளை உருவாக்குவதில் பெயர் பெற்ற யாஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரியை முதல் முறையாக ஒன்றிணைக்கிறது.
இந்தப் படத்தில் அஹான் பாண்டே கதாநாயகனாக அறிமுகமாகிறார் கதாநாயகியாக அனீத் பத்தாவை (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் தனது அற்புதமான நடிப்பால் இதயங்களைக் கொள்ளை கொண்டவர்) என்பவர் நடித்துள்ளார்.
நம் காலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்படும் இளம் காதல் படமாக சையாரா படம் உள்ளது . இதுவரை இந்த இசை ஆல்பத்தில் இருந்து நான்கு பாடல்களான சையாரா , ஜூபின் நௌடியாலின் பர்பாத், விஷால் மிஸ்ராவின் தும் ஹோ தோ & சச்செட்-பரம்பராவின் ஹம்சஃபர் ஆகியவை இந்திய இசை அட்டவணையில் அலைகளை உருவாக்கியுள்ள நிலையில், இந்த ஆண்டின் சிறந்த ஆல்பமாக இது அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .
சையாரா பட பாடல்களைத் தவிர, இந்த படத்தின் தலைப்பான சையாராவும் பார்வையாளர்களின் ஆர்வத்தைத் தூண்டியுள்ளது.
சாயாரா படத்தை யாஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார், இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ந் தேதியன்று உலகமெங்கும் வெளியாகிறது.
BTK பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் B.T. அரசகுமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அருள் அஜித் இயக்கத்தில் நடிகைகள் ஷிவதா மற்றும் ரம்பா பாண்டியன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் 'கயிலன்' திரைப்படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
ஜூலை 25ம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் 'கயிலன் ' திரைப்படத்தில் ஷிவதா, ரம்யா பாண்டியன், பிரஜின், மனோபாலா, ஞானசம்பந்தம், அபிஷேக் ஜோசப், அனுபமா குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமீன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் ஹர்ஷா, ஹரி எஸ்.ஆர். இசையமைத்திருக்கிறார்கள்.
விறுவிறுப்பான திரில்லராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் முன்னோட்டத்தை வெளியிடும் விழாவில் படக்குழுவினருடன் இயக்குநர்கள் கே பாக்யராஜ், கௌரவ் நாராயணன், தயாரிப்பாளர்கள் கே ராஜன், தனஞ்செயன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தயாரிப்பாளர் B.T. அரசகுமார் பேசுகையில், ''இங்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்களுக்கு முதலில் வணக்கத்தையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
அண்ணன் கே. ராஜன் இங்கு வந்தவுடன் 'கயிலன்' படத்தின் கதை என்ன? கிரைம் ஸ்டோரியா? ஃபேமிலி ஸ்டோரியா? எனக் கேட்டார். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அது என்ன என்று எனக்குத் தெரியாது. இயக்குநர் அஜித் மீதான நம்பிக்கையினால் நான் அந்த பக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. ஏதோ சம்பிரதாயத்திற்காக ஒரே ஒரு நாள் படப்பிடிப்பு தளத்திற்கு வாருங்கள் என்றனர். அதற்காக சில மணித்துளிகள் அங்கு சென்றேன்.
இந்த படத்தை பற்றி நான் சிந்திப்பதை விட அன்புத்தம்பி அருள் அஜித் சிறப்பாக சிந்தித்திருக்கிறார். மிக சிறந்த திரை காவியமாக கொண்டு வர வேண்டும் என அவர் கடினமாக உழைத்து இருக்கிறார். அதை நான் ஒவ்வொரு நாளும் பார்த்திருக்கிறேன். உங்களுடன் இணைந்து தான் நானும் இந்த படத்தின் முன்னோட்டத்தை இங்கு பார்த்தேன்.
இந்தப் படத்தின் நாயகி ஷிவதா தங்கமான சகோதரி. ஒவ்வொரு முறையும் பணிவாக நடக்கும் அவருடைய நடவடிக்கைகள் போன்று சினிமாவில் காண்பது அரிது. அவர் இந்தப் படத்தின் மூலம் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும்.
நாடக குடும்பத்தில் இருந்து சினிமாவிற்கு வந்தவன் நான். எனது தாய் மாமன் வி கே சக்திவேல் மணப்பாறையில் மிகப்பெரிய நடிகர். கலைஞானத்தின் தம்பி போல் பணியாற்றியவர். 'பெரிய மருது ', 'மிருதங்க சக்கரவர்த்தி' போன்ற படங்களில் நடித்திருக்கிறார்.
எனது தாத்தாவும் நாடக நடிகர் தான். அந்த வகையில் என்னுடைய ரத்தத்திலும் கலை உணர்வு ஊறி இருக்கிறது. என்றாவது ஒருநாள் திரைத்துறையில் சாதிக்கலாம் என காத்திருந்தேன்.
1988-89 ஆண்டுகளில் நடிகராக வேண்டும் என்ற ஆசையில் சென்னைக்கு வருகை தந்த என்னை இயக்குநர் டி. ராஜேந்தர் தான் திசை திருப்பினார். இதை அவரிடமே சொல்லி இருக்கிறேன். ஆனால் இந்த ஆசையை அப்போது கே.பாக்யராஜிடம் தெரிவித்திருந்தால் நடிகராகி இருப்பேன். 89ம் ஆண்டிலிருந்து தமிழ் திரையுலகில் பணியாற்றுகிறேன். ஆனால் தற்போது தான் முதல் முறையாக 'கயிலன்' திரைப்படத்தை தயாரித்திருக்கிறேன்.
இந்தத் திரைப்படத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும், பணியாற்றிய தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் மனமார்ந்த நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
இசையமைப்பாளர் கார்த்திக் ஹர்ஷா பேசுகையில், ''என்னை நம்பி இப்படத்தின் பாடல்களுக்கு இசையமைக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த திரைப்படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள் இடம் பிடித்திருக்கின்றன. எல்லா பாடல்களும் நன்றாக அமைந்திருக்கின்றன. இப்படத்தின் பின்னணி இசையை ஹரி அமைத்திருக்கிறார். இந்தத் திரைப்படம் ஜூலை 25 வெளியாகிறது. அனைவரும் பார்த்து ரசித்து ஆதரவு தர வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
பின்னணி இசையமைப்பாளர் ஹரி பேசுகையில், ''இப்படத்தின் கதை சுவராசியமாக சொல்லப்பட்டிருக்கிறது. வெளியான பிறகு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்கும். கலைஞர்கள் தங்களுடைய அற்புதமான உழைப்பை வழங்கியிருக்கிறார்கள். அனைவரும் திரையரங்கத்திற்கு வருகை தந்து பார்த்து ரசிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்,'' என்றார்.
இயக்குநர் கௌரவ் நாராயணன் பேசுகையில், ''இந்தப் பட முன்னோட்டத்தின் இறுதியில், 'போராட வேண்டும். போராடினால் தான் அனைத்தும் கிடைக்கும்' என்ற செய்தி இடம்பெறுகிறது. சினிமாவில் கதையை உருவாக்குவதற்கும் போராட வேண்டும். அந்தக் கதைக்கு ஒரு நாயகனை தேடுவதற்கு ஒரு போராட்டம் வேண்டும். அதை வெளியே கொண்டு வர வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளரை தேட வேண்டும் . அதற்கும் போராட வேண்டும். இதையெல்லாம் கடந்து படத்தின் வெளியீட்டிற்காகவும் போராட வேண்டும்.
நிறைய போராட்டங்களுக்கு பிறகு தான் இயக்குநர் அஜித் இந்த மேடையில் இருக்கிறார். முதல் காதல், முதல் முத்தம் மறக்க முடியாதது. அது போல் முதல் படமும் முதல் மேடையும் மறக்க முடியாதது. பிளஸ் டூ தேர்வு எழுதிவிட்டு முடிவுக்காக காத்திருக்கும் மாணவனின் மனநிலையை போன்றது இது. அவருக்குள் இருக்கும் தவிப்பை நான் உணர்கிறேன். இந்தப் படத்தின் தயாரிப்பாளருக்கும், அவருக்கும் இந்த தருணத்தில் வாழ்த்துகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இன்று பெரிய படம் எது சின்ன படம் எது என்று மக்கள் முடிவு செய்கிறார்கள். ஊடகத்தினர் முடிவு செய்கிறார்கள். அதே தருணத்தில் 'கன்டென்ட் வின்ஸ்' என்று சொல்வேன். கன்டென்ட் நன்றாக இருந்தால் மக்கள் மிகப் பெரும் அளவில் ஆதரவு தெரிவிக்கிறார்கள். இன்றைய நிலையில் ஒரு படம் வெற்றி பெற வேண்டும் என்றால் ஒரு கன்டென்ட், அதற்கான ஆய்வு மற்றும் நியாயமான உழைப்பு இருந்தால் மக்களின் ஆதரவு உறுதி. அண்மையில் வெளியான 'டி என் ஏ', 'மார்கன்' ஆகிய படங்களுக்கும் இது சாத்தியமானது.
இன்றைய தேதியில் இயக்குநர்களை விட பார்வையாளர்கள் புத்திசாலிகளாக இருக்கிறார்கள். முதல் காட்சியை இயக்குநர் சொல்லத் தொடங்கியதுமே பார்வையாளன் கிளைமாக்ஸ் இப்படித்தான் இருக்கும் என சொல்லி விடுகிறான். அதனால் எந்த இயக்குநர் ரசிகர்களை சிறந்த அறிவாளியாக நினைத்து அவர்களை விட அறிவுபூர்வமாக சிந்தித்து படத்தை இயக்குகிறாரோ அவரது திரைப்படங்கள் தான் வெற்றி பெறும். இந்தத் திரைப்படத்தின் முன்னோட்டத்தை பார்க்கும் போது இது திரில்லராக இருக்கும் என்று தோன்றுகிறது. இந்த திரில்லர் அர்த்தமுள்ள திரில்லராக இருக்கும் பட்சத்தில் 200 சதவீதம் மிகப்பெரிய வெற்றியைத் தரும்,'' என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசுகையில், ''இவ்விழாவிற்கு வருகை தருவதற்காக இயக்குநர் அருள் அஜித் எனக்கு விடுத்த அழைப்பு கவர்ந்ததால் இங்கு வருகை தந்தேன். அதுவும் இல்லாமல் கார்ப்பரேட் துறையில் 25 ஆண்டு காலம் பணியாற்றிய பிறகு, நான் தனியாக 2016ம் ஆண்டில் திரைப்பட வணிகத்தில் ஈடுபட்ட போது வாங்கிய முதல் திரைப்படமான 'ஜீரோ' படத்தின் நாயகி ஷிவதா. அவர் இந்த படத்தில் நடித்திருப்பதால் வருகை தருவதற்கு மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டேன். அவர் தேர்வு செய்து நடிக்கும் படங்கள் அனைத்தும் நன்றாக இருக்கும். அவர் இந்தப் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். கம்பீரமான, ஸ்டைலிஷான போலீஸ் ஆபீஸராக நடித்திருக்கிறார். அவருக்காகவே இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்.
இந்தப் படத்தின் தயாரிப்பாளரை வாழ்த்த வேண்டும். நாங்களெல்லாம் காலை எட்டு மணிக்கெல்லாம் படப்பிடிப்பு தொடங்கி விட்டதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வோம். இதற்காகவே படப்பிடிப்பு தளத்திற்கு செல்வோம். நானும் இயக்குநர் கௌரவ் நாராயணனும் இணைந்து 'சிகரம் தொடு' எனும் திரைப்படத்தில் பணியாற்றி இருக்கிறோம். அந்தப் படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு நான் ஏழு முப்பது மணிக்கு எல்லாம் சென்று விடுவேன். எட்டு மணிக்கு படப்பிடிப்பை தொடங்க வேண்டும் என நெருக்கடி கொடுப்பேன். இப்படி செய்தால் தான் குறைந்த நாட்களில் படத்தை திட்டமிட்டபடி நிறைவு செய்ய முடியும். மலையாளத்தில் இப்படித்தான் திட்டமிட்டு படப்பிடிப்பை நடத்துவார்கள்.
ஒரு படம் பரவலான மக்களை சென்றடைந்தாலே வெற்றி பெறும். அந்த வகையில் இந்த' கயிலன்' திரைப்படமும் வெளியாகி, மக்களை சென்றடைந்து வெற்றி பெற வேண்டும் என வாழ்த்துகிறேன்,'' என்றார்.
நடிகர் பிரஜின் பேசுகையில், '' இந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பளித்த இயக்குநருக்கும், தயாரிப்பாளருக்கும் நன்றி. இந்த ஆண்டின் எனது நடிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இது. மிகவும் எதிர்பார்ப்புடன் இருக்கிறேன்.
தற்போது சினிமாவில் நாம் நல்ல கன்டென்டுகளை கொடுத்தாலும் அதனை முறையாக விளம்பரப் படுத்துவதில் கோட்டை விடுகிறோம். சில படங்கள் மட்டும் தான் வேர்ட் ஆப் மௌத்தின் மூலம் வெற்றி பெறும். 'கயிலன்' நல்ல திரைப்படமாக உருவாகி இருக்கிறது.
இயக்குநர் அருள் அஜித் தொடர்ந்து படங்களை இயக்கினாலும் வளரும் நடிகர்களுக்கும் புதுமுக நடிகர்களுக்கும் வாய்ப்பளிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தில் சொன்னதைப் போல போராட வேண்டும். போராடினால் தான் வெற்றி கிடைக்கும் இது அனைவருக்கும் பொருந்தும். இப்படம் வெற்றி பெற வாழ்த்துங்கள்,'' என்றார்.
பேராசிரியர் முனைவர் கு. ஞானசம்பந்தம் பேசுகையில், ''இந்தப் படத்தில் நிறைய புது முகங்கள் நடித்திருப்பதாகச் சொன்னார்கள் நானும் புது முகம் தான். 'விருமாண்டி' படத்தில் கமல்ஹாசன் திரைக்கதை எழுதும் போது அதில் மதுரை மண்ணின் பேச்சு வழக்கு இருக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு உதவினேன். திடீரென்று அவர் என்னைப் பார்த்து நடிக்கிறீர்களா? எனக் கேட்டார் நான் பயந்துவிட்டேன். ஏனென்றால் அது மாடு பிடிக்கும் படம். இருந்தாலும் கமல் நான் மாட்டை பிடிக்கிறேன் நீங்கள் மைக்கை பிடியுங்கள் என்றார். இது எனக்கு பொருத்தமாக இருக்கவே ஒப்புக்கொண்டேன். தற்போது வரை ஐம்பது திரைப்படங்களில் நடித்திருக்கிறேன்.
இயக்குநர்கள் கதை செல்ல வரும்போது எனக்கு பொருத்தமான கதாபாத்திரத்தில் மட்டுமே நடிக்க முடியும் என்பதை சொல்லி விடுவேன். இந்த படத்தில் எனக்கு சிறிய கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் என்னை அருமையாக கவனித்தார்கள்.
நான் முதலில் ஒரு சினிமா ரசிகன். அதனால் நான் பார்க்கும் எந்த படங்களையும் யாருடைய மனதும் காயப்படுத்தும் நோக்கத்தில் விமர்சிக்க மாட்டேன். சிலர் கடுமையான விமர்சனங்களை முன் வைக்கும் போது வருத்தம் அடைவேன்.
தற்போது மக்கள்தான் தேர்தலைப் போல் திரைப்படங்களையும் தீர்மானிக்கிறார்கள். இந்தப் படத்தின் முன்னோட்டத்திலேயே முன் கதை சுருக்கம் இருக்கிறது. யார் அந்த கயிலன்? அடுத்து என்ன நடக்கும்? என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. அந்த காலத்தில் பாட்டு புத்தகத்துடன் அந்தப் படத்தின் முன் கதை சுருக்கம் இருக்கும் .அதை பார்த்துவிட்டு தான் படத்திற்கு செல்வார்கள்.
இந்தப் படத்திற்காக அனைவரும் கடினமாக உழைத்திருக்கிறார்கள். இந்த படம் நிச்சயம் வெற்றி பெறும். உங்களின் தீர்ப்புக்காக காத்திருக்கிறோம், நன்றி,'' என்றார்.
நடிகை ஷிவதா பேசுகையில், '''நெடுஞ்சாலை' படத்திலிருந்து 'கயிலன்' படம் வரை எனக்குத் தொடர்ந்து ஆதரவு அளித்துக் கொண்டிருக்கும் அனைவருக்கும் நன்றி. வருடத்திற்கு ஒரு தமிழ் படத்தில் தான் பணியாற்றுகிறேன், இருந்தாலும் தொடர்ந்து நீங்கள் ஆதரவு அளித்துக் கொண்டிருக்கிறீர்கள். அந்த ஆதரவு இந்தப் படத்திற்கும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். இந்தப் படம் வெளியான பிறகு மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என நம்பிக்கையுடன் காத்திருக்கிறேன்," என்றார்.
தயாரிப்பாளர் கே. ராஜன் பேசுகையில், '''கயிலன்' என் பிள்ளை அரசகுமார் தயாரித்த படம். அது என் படம் தான். அரசகுமார் 1991ம் ஆண்டில் நான் நடத்தும் வண்ணாரப்பேட்டை காமராஜ் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளிக்கு வருகை தந்தார். அப்போது நான் தமிழ்நாடு மெட்ரிகுலேஷன் பள்ளி சங்கத்தின் தலைவர். என்னை சந்தித்து 'புதுக்கோட்டையில் இருந்து வருகை தந்திருக்கிறேன். சங்கத்தில் இணைய வேண்டும்' என கேட்டுக்கொண்டார். அப்போது அவரை பேச அனுமதித்தேன் அவரது பேச்சில் தீப்பொறி பறந்தது. அப்போதே இவர் மிகப்பெரிய ஆளாக வருவார் என கணித்தேன்.
தொடர்ந்து கடுமையாக உழைத்தார், துணிச்சல் மிக்கவர். வறுமையில் வாடினாலும் சிறிது பணம் சேர்ந்தவுடன் திராவிட விழிப்புணர்ச்சி கழகம் என்று ஒரு அரசியல் கட்சியை தொடங்கினார். நர்சரி பள்ளியையும், அரசியல் கட்சியையும் ஒருசேர நடத்தினார். அதன் பிறகு அவரை சந்தித்து அரசியல் கட்சி வேண்டாம், ஏதேனும் ஒரு அரசியல் கட்சியில் இணைத்துக் கொள் என அறிவுறுத்தினேன். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் அவரை சேர்த்து விட்டேன். மயிலாப்பூரில் ஒரு விழா எடுத்து தன் கட்சியை பாரதிய ஜனதா கட்சியுடன் இணைத்தார். அதன் பிறகு பாரதிய ஜனதா கட்சியில் மாநில துணைத்தலைவரானார்.
அதன் பிறகு புதுக்கோட்டையில் நடந்த ஒரு திருமண விழாவில் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். அந்த விழாவில் தமிழகத்தை ஆளக்கூடிய முதல்வர் பதவிக்கு தகுதி பெற்ற மு.க. ஸ்டாலின் அவர்களே என பேசினார். உடனே அவரை பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். ஆனால் மு.க. ஸ்டாலினிடமிருந்து அழைப்பு வந்தவுடன் திமுகவில் சேர்ந்து விட்டார். திமுகவின் செய்தி தொடர்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். இன்று ஸ்டாலினின் நம்பிக்கைக்குரிய வலது கரமாகவும் செயல்பட்டு வருகிறார். பல நல்ல காரியங்களை செய்து வருகிறார்.
2001ம் ஆண்டில் நான் சின்ன திரைப்படங்களை தயாரித்துக் கொண்டிருந்தபோது, 'என்னையும் தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக்குங்கள். நானும் படத்தை தயாரிக்கிறேன்' என்றார். நான் தான் கொஞ்சம் பொறுத்திரு என்றேன்.
அதனைத் தொடர்ந்து நான் விநியோகஸ்தர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட்ட போதும் எனக்கு பாதுகாப்பாக இருந்தார்.
25 ஆண்டுகளுக்கு முன் படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்த அரசகுமார் இன்று தயாரிப்பாளராக மாறி இருக்கிறார். இன்று ஒரு திரைப்படத்தை இயக்குநரை நம்பி அளித்து தயாரிப்பாளராகி இருக்கிறார்.
தற்போது எழுபத்தைந்து சதவீத தமிழ் படத்திற்கு ஆங்கிலத்தில் பெயர் வைக்கிறார்கள். ஆனால் இவர் 'கயிலன்' என அருமையான தமிழில் பெயர் வைத்திருக்கிறார். கம்பராமாயணம், திருக்குறள் போன்ற நூல்களில் ஏராளமான தமிழ் பெயர்கள் இருக்கின்றன, அவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைத்த இயக்குநரை பாராட்டுகிறேன்.
இப்படத்தின் முன்னோட்டம் ஆங்கில படத்தை போல் இன்ட்ரஸ்டிங்காக இருக்கிறது. இதன் ரீ-ரிக்கார்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், எடிட்டிங் ஃபர்ஸ்ட் கிளாஸ், கேமரா ஃபர்ஸ்ட் கிளாஸ். இப்படி எல்லா ஃபர்ஸ்ட் கிளாஸ்சும் இருப்பதால், மக்களும் இந்த படத்தை ஃபர்ஸ்ட் சாய்ஸாக பார்ப்பார்கள்.
தமிழ் பண்பாடு குறையாத, தமிழ் கலாச்சாரம் மிக்க திரைப்படங்களை உருவாக்குங்கள் என இளம் இயக்குநர்களை கேட்டுக்கொள்கிறேன்.
இன்று திரைப்படங்களில் பெண்கள் மது அருந்தும் காட்சிகளை இயக்குநர்கள் இடம்பெறச் செய்கிறார்கள். இதை தவிர்த்துக் கொள்ளுங்கள் என தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன் ஏனெனில் பெண்கள் தான் குடும்பத்தை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை காப்பாற்றுகிறார்கள். குழந்தைகளை படிக்க வைக்கிறார்கள்.
300 கோடி ரூபாய், 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகும் திரைப்படங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு ஊதிய உயர்வு அளிக்க வேண்டும். சிறிய முதலீட்டில் தயாராகும் திரைப்படங்களுக்கான திரையரங்க கட்டணத்தை குறைக்க வேண்டும். இப்படி செய்தால் ஏழைகள் திரையரங்கத்திற்கு வருவார்கள். திரைப்படங்கள் வெற்றி பெறும். தயாரிப்பாளர்கள் வாழ்வார்கள். இதற்கு ஆவண செய்ய வேண்டும் என தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுகிறேன்," என்றார்.
இயக்குநர் அருள் அஜித் பேசுகையில், ''உதவி இயக்குநர்களை அறிமுகப்படுத்த வேண்டும் என்றால் ஒரு தயாரிப்பாளர் தேவை. அந்த வகையில் என்னை நம்பி இந்தப் படத்தை இயக்குவதற்கான வாய்ப்பை வழங்கிய தயாரிப்பாளர் பி.டி. அரசகுமாருக்கு என் வாழ்நாள் முழுவதும் நன்றி தெரிவிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
படத்தின் படப்பிடிப்பு தொடங்கிய நாள் முதல் இறுதி வரை படப்பிடிப்பு தளத்திற்கு அவர் வரவே இல்லை. ஒரே ஒரு நாள் மட்டும் எங்களுடைய வற்புறுத்தலுக்காக வருகை தந்தார். எனக்கு அந்த அளவிற்கு முழு சுதந்திரம் அளித்தார். நானும், என்னுடைய குழுவினரும் இணைந்து பணியாற்றி படத்தை நிறைவு செய்து விட்டோம். தயாரிப்பாளருக்கு இன்னும் நான் திரையிட்டு காண்பிக்கவில்லை, விரைவில் காண்பிப்பேன். அப்படியொரு நம்பிக்கையை என் மீது தயாரிப்பாளர் வைத்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன்.
நான் என்றைக்குமே தயாரிப்பாளர்களின் இயக்குநராக தான் இருக்க வேண்டும் என விரும்புகிறேன். அவர்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்து நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறார்கள் அவர்கள் தரும் வாய்ப்பு நம் வாழ்க்கை. அதை நாம் சரியாக காப்பாற்ற வேண்டும். அப்போதுதான் ஏனைய தயாரிப்பாளர்களும் நம் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்வார்கள். இதன் பிறகு தான் நாம் நல்ல படங்களை வழங்க முடியும்.
'கயிலன்' என்பதற்கான பொருள் என்னவென்றால், தவறு செய்யாதவன், நிலையானவன். சாதிப்பவன். இது ஒரு சங்க காலச் சொல். ஜீரோ எரர்ஸ் என்றும், தி பெர்பஃக்ஷனிஸ்ட் என்றும் சொல்லலாம். இந்தச் சொல் இந்த கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் வைத்திருக்கிறோம். மேலும் இப்படத்தின் உச்சகட்ட காட்சியில் அனைவருக்கும் ஒரு சர்ப்ரைஸ் இருக்கிறது. அதற்கும் இந்தச் சொல் பொருத்தம் என்பதால் வைத்திருக்கிறோம்.
இந்தப் படத்தின் பணிகள் தொடங்கும் போது தயாரிப்பாளர் என்னிடம், 'நீங்கள் ஒரு கமர்ஷியல் படத்தை வழங்க உள்ளீர்கள். அதில் எங்கேயும் வாய்ப்பு கிடைத்தால் நல்லதொரு மெசேஜை சொல்லுங்கள். சொல்ல முயற்சி செய்யுங்கள்' என்றார். இந்தப் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கிறது. அதிலும் கிளைமாக்ஸில் ஒரு மெசேஜ் இருக்கிறது.
என்னுடைய பார்வையில் திரில்லர் திரைப்படங்களில் குறிப்பாக இன்வெஸ்டிகேட்டடிவ் திரில்லர் படங்களில் ஆணாதிக்கம் தான் அதிகம் இருக்கும். இதனால் நாங்கள் படத்தில் இரண்டு முதன்மையான கதாபாத்திரங்கள் இடம்பெற வேண்டும் என்றும், இரண்டும் பெண்களாக இருக்க வேண்டும் என்றும் தீர்மானித்தோம். அதற்காக நாங்கள் முதலில் தேர்வு செய்தது நடிகை ஷிவதாவை தான், அவர் நடிப்பில் வெளியான 'அதே கண்கள்', 'நெடுஞ்சாலை' போன்ற படங்களில் அவருடைய நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். இவர்களைப் போல் திறமையான நடிகைகள் இருந்தால் இயக்குநரின் பணி எளிது.
நாங்கள் இப்படத்தின் பணிகளை விரைவாக நிறைவு செய்திருக்கிறோம் என்றால், அதற்கு ஷிவதாவின் பங்களிப்பு அதிகம். அற்புதமான மனிதநேயம் மிக்கவர். அவர் படப்பிடிப்பு தளத்தில் இருந்தால் அனைவரையும் அரவணைத்து செல்வார்.
இவரைத் தொடர்ந்து நடிகை ரம்யா பாண்டியன் முழுமையான ஒத்துழைப்பை வழங்கினார். அவரும் திறமையான நடிகை தான்.
மேலும் இப்படத்தில் பேராசிரியர் ஞானசம்பந்தம் நிதி அமைச்சராக நடித்திருக்கிறார். மனோபாலா, கோபிநாத், அனுபமா குமார் என பலரும் நடித்திருக்கிறார்கள்.
இந்தப் படத்திற்கு 115 நபர்கள் பின்னணி பேசி இருக்கிறார்கள் அந்த அளவிற்கு இந்த படத்தில் கதாபாத்திரங்கள் இடம் பிடித்திருக்கின்றன. எனவே கஷ்டப்பட்டு இப்படத்தினை நிறைவு செய்து இருக்கிறோம். ஜூலை 25ம் தேதியன்று இப்படம் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என அனைவரையும் கேட்டுக் கொள்கிறேன்''என்றார்.
இயக்குநர் கே. பாக்யராஜ் பேசுகையில், ''இந்தப் படத்தில் நடித்திருக்கும் நடிகர் நடிகைகள் பணியாற்றி இருக்கும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகள்.
கே ராஜன் பேசும்போது தமிழில் பெயர் வைப்பதை பற்றி குறிப்பிட்டார். அதைக் கேட்டவுடன் நான் என்னுடைய படங்களை பற்றி யோசித்தேன். அதில் ஒரு படத்திற்கு 'டார்லிங் டார்லிங் டார்லிங் ' என்று பெயர் வைத்திருந்தேன். அதன் பிறகு ஒரு படத்தில் 'டாடி டாடி' என்று பாடலையும் வைத்திருந்தேன். அத்துடன் 'பேட்டா பேட்டா மேரா பேட்டா' என இந்தியையும் வைத்திருந்தேன். இதெல்லாம் ஏன் என்றால் சினிமா மக்களுக்கானது. மக்களுக்கு பிடித்தமானதை செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான். அதை தவிர்த்து தமிழுக்கு எதிராக செயல்பட வேண்டும் என்பது நோக்கம் அல்ல. எங்களுக்கு தமிழ் தான் சோறு போடுகிறது.
நல்ல படம் எடுத்தால் அது கண்டிப்பாக வெற்றி பெறும். அதை வெற்றியை யாராலும் தடுக்க முடியாது. இதற்கு சிறந்த உதாரணம் 'டூரிஸ்ட் ஃபேமிலி'. இந்தப் படத்தின் இயக்குநரை நான் மனதார பாராட்டுகிறேன்.
இந்தப் படத்தின் பெயர் 'கயிலன்' என்று சொன்னவுடன் மீண்டும் ஒருமுறை தமிழைப் படிக்க வேண்டும் என்று தோன்றியது. அதன் பிறகு இயக்குநர் 'கயிலன்' பெயருக்கான பொருளை சொன்னார்.
இந்தப் படத்தின் முன்னோட்டத்தை எனக்கு அனுப்பினார்கள். அதனை பார்த்தேன். இதன் சாராம்சம் என்னவென்றால் போராட்டம் தான். போராட்டம் இல்லாமல் வாழ்க்கை இல்லை. என்னுடைய குருநாதருடன் இணைந்து பணியாற்றிய முதல் படத்தில் பெரும் போராட்டம் இருந்தது. அவருடைய மயிலு என்ற கதையை வைத்துக்கொண்டு ஏறாத கம்பெனிகளே இல்லை. அந்தப் படத்தின் படப்பிடிப்பும் திட்டமிட்டபடி தொடங்கவில்லை.
கமல்ஹாசனின் கால்ஷீட் இல்லை. அதன் பிறகு தயாரிப்பாளர் எங்களுக்கு நம்பிக்கை அளித்தார். பெரும் போராட்டத்திற்கு பிறகு வெளியான '16 வயதினிலே 'படம் பெரும் வெற்றியை பெற்றது. இரண்டாவது படமான 'கிழக்கே போகும் ரயில்' படத்திலும் போராட்டம் இருந்தது. அதையெல்லாம் எதிர்கொண்டு தான் வெற்றி பெற்றோம்.
இயக்குவர் பாலச்சந்தர் இரண்டு படங்களை இயக்கிய பிறகு தான் அவர் தன்னுடைய அரசாங்க வேலையை விட்டார். ஆனால் இந்த படத்தின் இயக்குநர் வேலையை திடீரென்று வேண்டாம் என்று சொல்லிவிட்டு சினிமாவில் இயக்குநராகி இருக்கிறார். கணவரின் விருப்பத்தை அறிந்து அதற்கு ஆதரவு அளித்த அவரது மனைவி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு நன்றி சொல்கிறேன்,'' என்றார்.
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில் இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவை படக்குழுவினர் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருதுகள் வழங்கி கௌரவிக்கும் வகையில் ஒருங்கிணைத்திருந்தனர்.
சென்னையில் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு வருகை தந்த அனைவரையும் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி (CFO) ரங்கராஜன் வரவேற்றார்.
இதனைத் தொடர்ந்து படத்தின் பிரம்மாண்டமான வெற்றிக்கு உறுதுணையாக இருந்த திரையரங்க அதிபர்கள், விநியோகஸ்தர்கள், பிரதீப் ரங்கநாதன், ஜார்ஜ் மரியான்,
ரோஹந்த் உள்ளிட்ட நடிகர்கள், இயக்குநர், ஒளிப்பதிவாளர், இசையமைப்பாளர், படத் தொகுப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்கள், தயாரிப்பு நிர்வாகிகள், தொழிலாளர்கள் என படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் குரோம்பேட்டை வெற்றி திரையரங்க அதிபர் ராகேஷ் பேசுகையில், ''மிகவும் சந்தோஷமான நாள் இது. 'டிராகன்' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா. பொதுவாக தமிழ் திரையுலகில் பிப்ரவரி மாதம் குறைவான வசூல் இருக்கும் என்று ஒரு கட்டுக்கதை இருக்கிறது. பிப்ரவரியில் ஒரு திரைப்படத்தை வெளியிட்டால் அது வெற்றி பெறாது என்ற கட்டுக்கதையை உடைத்து எறிந்து வெற்றி பெற்ற திரைப்படம் 'டிராகன்'. இந்த ஆண்டு தமிழக திரையரங்குகளில் வெளியான திரைப்படங்களில் அதிக வசூலை ஈட்டிய திரைப்படங்களில் ஒன்று அல்லது இரண்டாவது இடத்தை ' டிராகன்' பிடித்திருக்கிறது. இப்படத்தின் நாயகனான பிரதீப் இளைஞர்கள் மத்தியில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்திருக்கிறார். அவர் தொடர்ந்து வெற்றி படங்களை வழங்க வேண்டும் என வாழ்த்துகிறேன். ஏஜிஎஸ் நிறுவனம் தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வருகிறது. அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான 'ஓ மை கடவுளே' திரைப்படமும் சிறந்த படம் தான். அவர் இயக்கும் படங்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்,'' என்றார்.
கமலா சினிமாஸ் திரையரங்கத்தின் உரிமையாளர் விஷ்ணு பேசுகையில், ''குழுவாக இணைந்து இந்த படத்தை வழங்கி வெற்றி பெற செய்து இருக்கிறீர்கள். இந்த வெற்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. திரையரங்க உரிமையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருக்கிறோம். இத்திரைப்படம் வெளியான முதல் நாளன்று படக்குழுவினர் எங்கள் திரையரங்கத்திற்கு வருகை தந்தனர். அப்போது நான் 'இப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் நிச்சயமாக சந்திப்போம்' என்று தான் சொல்லி இருந்தேன். அது இன்று உண்மையாகி இருக்கிறது. தொடர்ந்து வெற்றி படங்களை அளித்து வரும் ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். 2024ம் ஆண்டு ஏஜிஎஸ் நிறுவனம் வெளியிட்ட 'கோட்'( GOAT) திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து 2025ம் ஆண்டில் 'டிராகன்' திரைப்படம் வசூலில் வெற்றி பெற்றிருக்கிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான 'லவ் டுடே' திரைப்படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினை வாங்கி இருக்கிறோம். அதைத்தொடர்ந்து அவரது நடிப்பில் வெளியான 'டிராகன்' படத்தின் நூறாவது நாள் வெற்றி விழா விருதினையும் வாங்கியிருக்கிறோம். தொடர்ந்து அவர் நடிக்கும் 'DUDE' படத்திற்கும் விருதினை வாங்குவோம். ஏஜிஎஸ் -அஸ்வத்- பிரதீப்- கூட்டணி மீண்டும் இணையும் என்று அறிவித்திருக்கிறீர்கள். அதற்காக ஆவலுடன் காத்திருக்கிறோம் நன்றி,'' என்றார்.
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து பேசுகையில், ''இந்த நான்கு மணி நேரத்தை நான் ஒரு அழகான தருணமாக கருதுகிறேன். படத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் அழைப்பு விடுத்து அவர்களுக்கு விருது வழங்க வேண்டும் என்று எண்ணிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு முதலில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு கலைஞருக்கு மிகப்பெரிய அங்கீகாரமே தயாரிப்பாளர்கள் கையாலோ அல்லது இயக்குநர் கையாலோ அல்லது நாயகன் கையாலோ விருது வாங்குவதுதான். இதனை சாதித்து காட்டிய ஏஜிஎஸ் நிறுவனத்திற்கு மீண்டும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மடிப்பாக்கம் ஏரியாவில் நானும், பிரதீப்பும் ஊர் சுற்றிக் கொண்டிருந்தபோது, ஒரு நாள் 'நான் ஹீரோவாக போகிறேன்' என்று பிரதீப் சொன்னார். உடனே நல்ல விஷயம் என வாழ்த்து தெரிவித்தேன். அந்தத் தருணத்தில் நாங்கள் 'டிராகன்' என்ற ஒரு படத்தில் இணைந்து பணியாற்றுவோம் என்றோ, அந்தப் படத்தின் நூறாவது நாள் வெற்றி விழாவில் சந்திப்போம் என்றோ நினைத்துக் கூட பார்க்கவில்லை.
'லவ் டுடே' படத்தை விட 'டிராகன்' படத்தின் மூலம் ஏராளமான ரசிகர்களை பெற்றிருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். இங்கு வெவ்வேறு ஊர்களில் இருந்து அவருடைய ரசிகர்கள் வருகை தந்திருக்கிறார்கள். அவர்களுக்கும் இந்தத் தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். எதிர்காலத்தில் பிரதீப் ரசிகர்கள் அதிகமாகி நேரு ஸ்டேடியமே நிறைந்து விடும். அதற்காகவும் காத்திருக்கிறேன். வருகை தந்த அனைவருக்கும் நன்றி,'' என்றார்.
கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி பேசுகையில், ''ஒரு படம் நன்றாக இருக்கும் போது அந்தப் படத்திற்கான வேர்ட் ஆஃப் மவுத் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஊடகங்களின் பங்களிப்பும் முக்கியம். இந்தப் படத்தின் பத்திரிகையாளர் காட்சிக்குப் பிறகு இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெறும் என்று பத்திரிகையாளர்களாகிய நீங்கள் பாராட்டினீர்கள். அதை ரசிகர்களிடமும் கொண்டு சேர்த்தீர்கள். இதற்காக இந்த தருணத்தில் ஊடகத்தினருக்கு என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
நடிகர் பிரதீப் ரங்கநாதன் பேசுகையில், ''இயக்குநர் அஸ்வத்தும், நானும் நண்பர்கள் என்று அனைவருக்கும் தெரியும். அவர் 'ஓ மை கடவுளே' படத்தின் கதையை எழுதிக் கொண்டிருந்தபோது ஒரு முறை என்னிடம், 'இப்படி ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அதில் நீ நடிக்கிறாயா?' என கேட்டார். அதற்கு நான் 'நடித்தால் ஹீரோவாகத் தான் நடிப்பேன்' என்று பதிலளித்தேன். அப்போது நான் 'கோமாளி' படத்தையும் இயக்கவில்லை. 'லவ் டுடே' படத்திலும் நடிக்கவில்லை. இருந்தாலும் என் மீது அஸ்வத் நம்பிக்கை வைத்தார்.
அதன் பிறகு 'லவ் டுடே' படத்தில் நடித்து முடித்த பிறகு, படம் வெளியாவதற்கும் முன் அஸ்வத்திற்கு திரையிட்டு காண்பித்தேன். அப்போது அவரிடம் என்னை ஹீரோவாக வைத்து படம் இயக்குவாயா? எனக் கேட்டேன். காலம் கனியட்டும் என பதிலளித்தார். நானும் நாங்கள் இருவரும் இணைந்து பணியாற்றுவதற்கு சிறிது கால அவகாசம் ஆகும் என நினைத்தேன். ஆனால் அதனை ஒரே படத்தில் சாதித்து காட்டியது ரசிகர்கள் தான்.
'டிராகன்' படத்தை இயக்கியதற்காக அஸ்வத் மாரிமுத்துவுக்கு மீண்டும் ஒரு முறை நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என் மீது நான் வைத்த குருட்டு நம்பிக்கை ரசிகர்களின் ஆதரவால் ஈடேறியது.
இதனைத் தொடர்ந்து இந்த படத்தின் வெற்றிக்கு ஏஜிஎஸ் நிறுவனமும் காரணம். இந்த நிறுவனத்துடன் நான் இணைந்து பணியாற்றிய இரண்டாவது நூறு நாள் படம் இது. 'லவ் டுடே' படத்தின் வெற்றி மேஜிக் என்றார்கள். இதனால் மீண்டும் ஒரு வெற்றி படத்தை வழங்க வேண்டுமே என நினைத்தோம். இந்தத் தருணத்தில் ஏஜிஎஸ் நிறுவனமும் இயக்குநர் அஸ்வத்தும் பேச்சுவார்த்தை நடத்தி ஒரு திரைப்படத்தை உருவாக்குவதாக இருந்தது. அப்படித் தான் 'டிராகன்' அமைந்தது. ஏஜிஎஸ் நிறுவனத்துடனான மகிழ்ச்சி நிரம்பிய இந்தப் பயணம் தொடரும்.
'கோமாளி', 'லவ் டுடே', 'டிராகன்' என என்னுடைய தொடர் மூன்றாவது நூறு நாள் திரைப்படம் இது. மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் 'டிராகன்' படத்தின் வெற்றி முக்கியமானது. ஏனெனில் 'கோமாளி', 'லவ் டுடே' ஆகிய இரண்டு திரைப்படங்களின் வெற்றியின் காரணமாக 'டிராகன்' படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகமாக இருந்தது.
என்னுடைய வெற்றிக்கு பின்னணியில் அஸ்வத், ஏஜிஎஸ் நிறுவனம், ரசிகர்கள் இருக்கிறார்கள். 'டிராகன்' படத்தின் வெற்றி மூலம் ரசிகர்கள் என்னை மிக உயர்ந்த இடத்திற்கு அழைத்துச் சென்று இருக்கிறார்கள். இதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றி உள்ளவனாக இருப்பேன்.
இந்த படத்தில் பணியாற்றிய நடிகர்கள்-நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் இந்த தருணத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்,'' என்றார்.
நூறாவது நாள் வெற்றி விழாவில் 'டிராகன்' பட உருவாக்கத்திற்காக படக்குழுவினரின் கடும் உழைப்பு குறித்த பிரத்யேக காணொலி திரையிடப்பட்டது என்பதும், இயக்குநர் மிஷ்கின் காணொலி வாயிலாக வாழ்த்தினையும், அன்பினையும் பகிர்ந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜியோ ஹாட்ஸ்டார் - ஜிகேஎஸ் புரொடக்ஷன் - செவன் சீஸ் & செவன் ஹில்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ராம் இயக்கத்தில் ஃபீல் குட் படமான 'பறந்து போ' ஜூலை 4 அன்று வெளியாகிறது. சிவா, கிரேஸ் ஆண்டனி, மாஸ்டர் மிதுன் ரியான், அஞ்சலி, அஜு வர்கீஸ், விஜய் யேசுதாஸ் மற்றும் பலர் இதில் நடித்துள்ளனர்.
படம் குறித்து ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் பகிர்ந்து கொண்டதாவது, ”இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ படம் பார்த்தேன். ராம் சினிமாவை பார்க்கும் விதம் வேறு விதமாக இருக்கும். தனது படங்களில் மெல்லிய மனித உணர்வுகளைக் கடத்துவதில் வல்லவர். குழந்தைகள் உலகத்தை எப்படி பார்க்க வேண்டும் என்பதை கவிதையாக படைத்திருக்கிறார் இயக்குநர் ராம்.
மகிழ்ச்சி, நகைச்சுவை, அழுகை, துக்கம் என பல உணர்வுகளை இந்தப் படத்தில் கடத்தியிருக்கிறார். அப்பாவாக நடித்திருக்கும் சிவா, அம்மாவாக நடித்திருப்பவரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். உணர்வுகளைக் கடத்துவதுதான் ஆகச்சிறந்த இயக்கம் என நம்புகிறேன். அதை ராம் சிறப்பாக செய்திருக்கிறார். மகனாக நடித்திருக்கும் அந்த சிறுவனும் சிறப்பாக நடித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை அனைவரும் திரையரங்குகளில் சென்று பார்க்க வேண்டும். நாம் கவனிக்கத் தவறிய குழந்தைகள் உலகத்தை அவர்களோடு இருந்து பார்க்க வேண்டும் என்பதை ராம் இந்தப் படத்தில் அழகாக காட்டியுள்ளார்.
படத்தில் சிகரெட் பிடிக்கும் காட்சி ஒன்று உண்டு. அதை ராம் அழகாக எடுத்திருக்கிறார். அனைவருக்கும் பிடிக்கும் வகையில் சிரிக்கும்படியாகவும் சிந்திக்கும்படியாகவும் அந்த காட்சி இருக்கும். டைனோசர் பற்றி அறியாத ஒரு தலைமுறையும் வாத்து பற்றி அறியாத ஒரு தலைமுறையும் சந்தித்து பேசிக் கொள்ளும்படியான காட்சியும் இந்தப் படத்தில் உண்டு. நாம் அனைவரும் பரபரப்பாக ஓடிக் கொண்டிருக்கும் வேளையில் நம் குடும்பத்திற்காகவும் நேரம் ஒதுக்க வேண்டும் என்பதையும் சொல்லி இருக்கிறார். படம் பிரமாதமாக உள்ளது. மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறும். படத்தில் மற்ற நடிகர்கள் தொழில்நுட்ப நடிகர்கள் அனைவரும் சிறப்பான பணியை செய்துள்ளனர்” என்றார்.
ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் பெருமையுடன் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி' இன் அசோசியேஷன் வித் குட் ஷோ. இந்தப் படத்தை கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கி இருக்க நடிகர்- தயாரிப்பாளர் விஷ்ணு விஷாலின் இளைய சகோதரர் ருத்ரா கதாநாயகனாக அறிமுகமாகிறார். படம் ஜூலை 11 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது. படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நடைபெற்றது.
நடிகர் விஷ்ணு விஷால், " விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் மற்றும் ரோமியோ பிக்சர்ஸ் சார்பில் அனைவருக்கும் வணக்கம்! 'ஓஹோ எந்தன் பேபி' படத்தின் டிரெய்லர் வெளியாவதற்கு முன்பு எனது தம்பி ருத்ராவை இங்கு நடிகராக அறிமுகப்படுத்த விரும்புகிறேன். ருத்ரா எனது பெரியப்பா மகன் எனது சொந்தத் தம்பி இல்லை. அப்பா - பெரியப்பா இருவரும் எளிமையான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர்கள். இருந்தாலும் அவர்களுக்கு சினிமா மீது தீராத காதல் உண்டு. படத்திற்கு ஒரு டிக்கெட் வாங்கிவிட்டு அதில் முதல் பாதி ஒருவரும், இரண்டாம் பாதி இன்னொருவரும் பார்த்துவிட்டு படம் முடிந்த பிறகு இருவரும் மாற்றி மாற்றி கதை சொல்லி கொள்வார்கள். அப்படியான சினிமா பைத்தியம் அவர்கள். இருவரும் பத்தாம் வகுப்பு வரை படித்தார்கள். பிறகு எனது பெரியப்பாவிற்கு படிப்பு வரவில்லை. அதனால் அவர் வேலைக்கு சென்று எனது அப்பாவை படிக்க வைத்து ஐபிஎஸ் ஆக்கினார். அவருடைய பையன் தான் ருத்ரா. ருத்ராவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை எப்படிப்பட்டது என்பது இந்த கதை மூலம் உங்களுக்கு புரிந்திருக்கும். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதை அவர்தான் ஃபோர்ஸ் செய்தார். இன்று இந்த மேடையில் நான் இருக்க காரணமே அவர்தான். அப்படி என்றால் ருத்ராவை எந்த அளவுக்கு அவர் சொல்லி வளர்த்திருப்பார் என்று பாருங்கள். நிச்சயம் உங்கள் ஆதரவு எங்கள் குடும்பத்திற்கு வேண்டும்" என்றார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன், "டிரெய்லர் அட்டகாசமாக இருக்கிறது. விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் என்றாலே வெற்றி படங்கள்தான். அந்த வரிசையில் இந்த படமும் உங்களுக்கு வெற்றியாக அமையும். விஷ்ணு விஷால் சொன்ன கதை எமோஷனலாக இருக்கிறது. இதையே ஒரு படமாக எடுக்கலாம். நான் என் குடும்பத்தின் சப்போர்ட் இல்லாமல் தான் சினிமாவுக்குள் வந்தேன். அப்படி இருக்கும் பொழுது உங்கள் கதை எனக்கு நெகிழ்ச்சியாக இருந்தது. கடந்த சில வருடங்களாக தமிழ் சினிமாவில் ஒரு டிரெண்ட் இருக்கிறது. எதாவது ஒரு பழைய ஹிட் பாடல் அந்தப் படத்தில் இடம் பெற்றிருந்தால் படம் சூப்பர் ஹிட் தான். 'லியோ' முதல் 'டூரிஸ்ட் ஃபேமிலி' வரை இதற்கு உதாரணம் சொல்லலாம். நீங்கள் ஒரு பழைய ஹிட் பாடலையே டைட்டிலாக வைத்திருக்கிறீர்கள். நிச்சயம் படம் வெற்றி பெறும்! ருத்ரவாவுக்கு ஹீரோவுக்கான சார்ம் உள்ளது. நீங்களும் படமும் வெற்றி பெற வாழ்த்துக்கள். தமிழ் சினிமாவில் இயக்குநர்களும் தயாரிப்பாளர்களும் போதை தொடர்பான காட்சிகளை வைக்கக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்".
நடிகர் ரெடின் கிங்ஸ்லி, " ரொம்பவே ஸ்வீட்டான படம் இது. விஷ்ணு விஷாலுடைய தம்பி அவரை விடவே இன்னும் நன்றாகவே நடிக்கிறார். ஏ.ஆர். முருகதாஸிடம் ருத்ரா உதவி இயக்குநராக வேலை செய்தார். இயக்கம் கற்றுக் கொண்டாரோ இல்லையோ சூப்பராக நடிக்க கற்றுக் கொண்டார்" என்றார்.
தயாரிப்பாளர் கலைப்புலி எஸ். தாணு, " இளைஞர்களுக்கான படம் என்பதை அதன் முன்னோட்டம் பார்க்கும் போதே தெரிகிறது. அவ்வளவு இளமையாக இருக்கிறது. ருத்ராவுக்கு வாழ்த்துக்கள்! விஷ்ணு விஷால் சொன்ன கதையும் நன்றாக இருந்தது. விரைவில் யாராவது படம் ஆக்குவார்கள் என்று எதிர்பார்க்கிறேன்".
தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, "எனது கரியரை தொடங்கியதில் இருந்தே விஷ்ணு விஷாலின் அப்பா எனக்கு வழிகாட்டியவர். அவர்களின் குடும்பத்தையும் அந்த எமோஷனையும் என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".
இயக்குநர் மனு ஆனந்த், " ருத்ரா சிறப்பாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அடுத்தடுத்த பெரிய பாதைக்கு இந்த படம் நல்ல தொடக்கம். விஷ்ணு விஷால் அவருடைய கரியரை தாண்டி அதிகம் பேசி இருப்பது ருத்ராவை பற்றி தான். வாழ்த்துக்கள்".
இயக்குநர் வெற்றிமாறன், "விஷ்ணு விஷால் தனது தம்பியை ஹீரோவாக அறிமுகப்படுத்தப் போகிறோம் என்று என்னை முன்பு சந்தித்தபோது சொல்லியிருந்தார். இப்பொழுது மேடையில் அவரது கதையை கேட்ட பின்பு அந்த வார்த்தையின் அர்த்தமும் கனமும் புரிகிறது. அவரது வாழ்க்கையின் நல்ல விஷயத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளும் பொழுது எங்களுக்கும் அது மகிழ்ச்சியை கொடுக்கிறது. படத்தின் பாடல்கள் அனைத்தும் அருமையாக உள்ளது. படத்தில் நடித்திருப்பவர்களின் ரிதமும் நண்பர்களை போலவே இருக்கிறது. படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்!"
நடிகர் கார்த்தி, "விஷ்ணு விஷால் மேடையில் சொன்ன கதையை கேட்ட போது 'வானத்தை போல' படம் போல இருந்தது. அந்த படத்தை போல உண்மையில் இருப்பார்களா என்று நினைத்தேன். ஆனால், இருக்கிறார்கள் என்பது ஆச்சரியம் தான்! அப்பா நம்மை கையில் தூக்கி வைத்திருந்தால் அண்ணா தோளில் தூக்கி வைத்திருப்பார். அந்த வகையில் நான் ரொம்பவே அதிர்ஷ்டசாலி! அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சிக்கும் வந்தேன். நான் புதிதாக திரைத்துறையில் நுழையும் பொழுது அத்தனை பேர் என்னை வாழ்த்தினார்கள், அன்பு கொடுத்தார்கள். அந்த அன்பை திரும்ப கொடுக்கவே இங்கு வந்தேன். ரசிகர்கள் தியேட்டரில் ஜாலியாக இருக்கவே வருகிறார்கள். வெற்றிமாறன் சார் தான் சீரியஸான படங்கள் எடுக்கும் டிரெண்டை உருவாக்கி விட்டார். அதேபோல இயக்குநர் கிருஷ்ணாவும் நல்ல நடிகர். இயக்குநராக அருக்கும் வாழ்த்துக்கள். படம் பெரிய வெற்றி பெற வேண்டும்".
இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, "ருத்ராவுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்! எனக்கு இப்படி ஒரு அண்ணன் இல்லையே என வருத்தமாக உள்ளது. மிதிலாவுடன் நான் தெலுங்கில் 'ஓ மை கடவுளே!' செய்திருக்கிறேன். அவருக்கு தெலுங்கு தெரியாது. ஆனால் ஒரு சிங்கிள் டயலாக் கூட மிஸ் செய்யாமல் புரொபஷனலாக நடித்தார். தமிழில் அவர் சரியான குழுவினருடன் அறிமுகமாவதில் மகிழ்ச்சி. வாழ்த்துக்கள்!"
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ், "டிரெய்லர் பார்க்கும் பொழுதே ருத்ரா மற்றும் படக்குழுவினர் எந்த அளவுக்கு சிறப்பாக வேலை பார்த்திருக்கின்றனர் என்று தெரிகிறது. நான் ஒரு கல்வியாளர். இருந்தாலும் படங்கள் நிறைய தயாரித்துக் கொண்டிருக்கிறேன். அது ஒரு தனி கதை! இதுவரை என் கதை மட்டும் தான் பெரிது என நினைத்திருந்தேன். ஆனால் விஷ்ணு விஷால் சொன்ன அவர் குடும்ப கதையிலிருந்து நான் இன்னும் வெளியே வரவில்லை. விஷ்ணு விஷால் நல்ல அண்ணன், நடிகர் என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல தயாரிப்பாளர். அவருடைய விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து நாங்கள் மூன்று படங்கள் தயாரிக்க இருக்கிறோம். வாழ்த்துக்கள்!".
இயக்குநர் தியாகராஜா குமாரராஜா, "படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்! இயக்குநர் கிருஷ்ணா என்னுடைய காலேஜ் ஜூனியர். எந்த ஒரு மொமெண்ட் கொடுத்தாலும் அதை சுவாரஸ்யமாக மாற்றி விடுவார். படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள்".
இயக்குநர் செல்ல அய்யாவு, " இயக்குநர் கிருஷ்ணா ஒரு நல்ல நடிகர். அவரை தமிழ் சினிமா விடாதே என்று யோசித்த போதுதான் விளம்பரங்கள், இயக்கம் என கலக்கிக் கொண்டிருந்தது தெரிய வந்தது. ருத்ராவை வைத்து நான் தான் முதல் படம் செய்வதாக இருந்தது. ஆனால் கிருஷ்ணா முந்தி கொண்டார். ருத்ரா ஹீரோவாக வேண்டும் என விரும்பாமல் அதற்காக தன்னை கடுமையாக தயார் செய்து கொண்ட ஒரு நபர். அவருக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள்".
நடிகர் விஜய் ஆதிராஜ், " விஷ்ணு விஷாலுக்கு சிறந்த தம்பி கிடைத்துள்ளார். அந்த அளவிற்கு சிறப்பாக தன்னை தயார் படுத்திக் கொண்டுள்ளார். படக்குழுவினருக்கும் தொழில்நுட்பக் குழுவினருக்கும் வாழ்த்துக்கள்! படம் நிச்சயம் வெற்றி பெறும்".
ஒளிப்பதிவாளர் ஹரிஷ் கல்யாண், "பெரிய சிரமம் இல்லாமல் எல்லோரும் குடும்பமாக வேலை பார்த்தோம். நன்றி".
எடிட்டர் கண்ணா, " இது என்னுடைய முதல் படம். என்னை நம்பி வாய்ப்பு கொடுத்த இயக்குநர் கிருஷ்ணாவுக்கு நன்றி. படம் நன்றாக வந்திருக்கிறது".
இசையமைப்பாளர் ஜென் மார்ட்டின், "எனக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு நன்றி. இயக்குநர் கிருஷ்ணாவை நடிகராக தெரியும். அவர்தான் இயக்கம் என்றதும் ஆச்சரியப்பட்டேன். ருத்ரா சிறப்பாக நடித்திருக்கிறார். மியூசிக்கலாக படத்தில் நிறைய ஸ்கோப் இருந்தது. இசை கேட்டுவிட்டு சொல்லுங்கள்".
நடிகை மிதிலா, " சென்னைக்கு வந்துள்ளது மீண்டும் என்னுடைய வீட்டிற்கு வந்தது போன்ற ஒரு உணர்வை கொடுத்துள்ளது. என்னை தேர்ந்தெடுத்த இயக்குநர், தயாரிப்பாளர் ருத்ரா மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி. படத்தில் நானும் பாடியிருக்கிறேன். கேட்டுவிட்டு சொல்லுங்கள்".
இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார், "நடிகனாக ஆரம்பித்ததில் இருந்து இப்பொழுது இயக்குநர் ஆனது வரை என்னை ஆதரித்த அனைவருக்கும் நன்றி. நான் நடிகனாக இருந்த பொழுது நான் என்ன வேண்டுமானாலும் பேசலாம். ஆனால், இயக்குநரான பின்பு என்னுடைய படம் தான் பேச வேண்டும். நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்பதை ஜூலை 11 அன்று திரையரங்குகளில் பாருங்கள். பொதுவாக, இயக்குநர் தான் நடிகருக்கு கதை சொல்வார்கள். ஆனால், எனக்கு இங்கு ருத்ரா தான் கதை சொன்னார். ஒரு நடிகராக தன்னை சிறப்பாக ருத்ரா தயார் செய்து இருக்கிறார். என்னுடைய வேண்டுகோளை ஏற்றுக்கொண்டு விஷ்ணு விஷால் இந்த படத்தில் ஒரு கேரக்டர் ரோல் செய்து இருக்கிறார். மிதிலாவும் தமிழ் வசனங்களை மனப்பாடம் செய்து கொண்டு சிறப்பாக நடித்திருக்கிறார்".
நடிகர் ருத்ரா, "இந்த தருணத்திற்காக தான் பல நாட்கள் காத்திருந்தேன். கனவு நனவாகி விட்டது. அண்ணன் என்னை ஹீரோவாக அறிமுகம் செய்வதற்கு நான் கொடுத்து வைத்திருக்க வேண்டும். சினிமா தான் என்னுடைய முதல் நண்பன். உதவி இயக்குநராக இருந்து பின்பு நடிகராகலாம் என்பது கார்த்தி சாரை பார்த்து தான் ஐடியா வந்தது. இந்த மேடை எவ்வளவு முக்கியம் என்பது எனக்கு தெரியும். நான் நன்றாக நடித்து இருக்கிறேன் என்றால் அதற்கு காரணம் இயக்குநர் கிருஷ்ணா தான். நடிகர்கள், தொழில்நுட்பக் குழுவினர் எல்லோரும் சிறப்பாக பணியாற்றியுள்ளனர். ஜென் மார்ட்டின் இசை மிகவும் பிடிக்கும். என்னுடைய குடும்பம், நண்பர்களுக்கு நன்றி. என்னுடைய அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி! அவரிடம் இருந்து நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். படம் பார்த்து விட்டு சொல்லுங்கள்" என்றார்.
நடிகர் விஷ்ணு விஷால், " எங்களுடைய குடும்ப கதையை புரிந்து கொண்டு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி. இந்த விழாவின் நாயகன் ஜென்மார்ட்டின் தான். புதுமுகங்கள் அறிமுகமாகும் ஒரு படத்திற்கு பாடல்களும் இசையும் மிகவும் முக்கியம். நல்ல குடும்ப கதைகளை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள் என்பதற்கு 'டூரிஸ்ட் ஃபேமிலி', 'டிராகன்' போன்ற படங்களின் வெற்றியே உதாரணம். இயக்குநர் கிருஷ்ணா அற்புதமாக இயக்கியுள்ளார். அனைத்து நடிகர்களுக்கும் வாழ்த்துக்கள்".
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கனவு படமான ' தி பாரடைஸ்' படத்தின் படப்பிடிப்பில் 'நேச்சுரல் ஸ்டார்' நானி இணைந்திருக்கிறார். இந்த திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரிக்கிறார். பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் இந்த அதிரடி திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது முழு வீச்சில் நடைபெறுகிறது. ' தசரா' படத்தின் அமோக வெற்றிக்குப் பிறகு 'நேச்சுரல் ஸ்டார் 'நானி- இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலாவின் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதால்.. திரையுலகினர் உற்சாகமடைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் 21ஆம் தேதியன்று தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 'நேச்சுரல் ஸ்டார்' நானி இன்று படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இது படக்குழுவினருக்கு மேலும் உத்வேகத்தை அளித்திருக்கிறது.
கடந்த ஒரு வாரமாக இன்றியமையாத குழந்தை பருவ காட்சிகளை படக்குழுவினர் படமாக்கினர். தற்போது படக் குழுவினர் தங்களது கவனத்தை நானி பக்கம் திருப்பி உள்ளனர். அவரது வருகையை *'தகாத் ஆகயா'" என ஜொலிக்கும் சொற்றொடரை பிரத்யேகமாக அறிவித்தனர். மேலும் இதற்காக வெளியிடப்பட்டிருக்கும் போஸ்டர்- கரடு முரடான பார்பெலுடன் நானி கதாபாத்திரத்தின் கால் மட்டும் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இது சத்தமாகவும், தெளிவாகவும் உள்ளதாகவும், நானி இதற்கு முன் எப்போதும் நடித்திராத அளவிற்கு மூர்க்கமாக தோன்றுகிறார் என்பதையும் உறுதி செய்கிறது.
ஹைதராபாத்தில் நடைபெறும் நாற்பது நாட்கள் கொண்ட இந்த படப்பிடிப்பில் முன்னணி நடிகர்களும் கலந்து கொள்கிறார்கள். இதற்காக ஹைதராபாத்தில் ஒரு பிரம்மாண்டமான மற்றும் கரடு முரடான பின்னணியில் அரங்குகள் கவனத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டணியில் உருவான 'தசரா ' திரைப்படம் இந்திய அளவில் இருந்தால்... தற்போது உருவாகும் தி பாரடைஸ் உலகளாவியதாக இருக்கும். தமிழ், தெலுங்கு ,மலையாளம், கன்னடம், இந்தி, வங்காளம், ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் என பன்மொழிகளிலும் இப்படம் வெளியாகிறது.
இப்படத்தின் டைட்டிலுக்கான போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸ்... படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. குறிப்பாக வசனங்களும், அதிர்ச்சியூட்டும் காட்சிகளும், 'ராக் ஸ்டார்' அனிருத்தின் அதிரடி இசையும் , நானியின் திரை தோற்றமும்.. ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன. அத்துடன் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது.
2026 மார்ச் மாதம் 26 ஆம் தேதியன்று 'தி பாரடைஸ் ' திரைப்படம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என்பதை தயாரிப்பாளர்கள் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளனர்.
'சேரிகளின் ராஜா' ரசிகர்களை சந்திக்க வருகிறார்... காத்திருங்கள்! இந்த முறை இவரை உலகம் உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கிறது.
நடிகர்கள் : நானி
தொழில்நுட்பக் குழு :
எழுத்து & இயக்கம் : ஸ்ரீகாந்த் ஓட்டேலா
தயாரிப்பாளர் : சுதாகர் செருகுரி
தயாரிப்பு நிறுவனம் : SLV சினிமாஸ்
இசை : அனிருத் ரவிச்சந்தர்
படத்தொகுப்பு : நவின் நூலி
தயாரிப்பு வடிவமைப்பாளர் : அவினாஷ் கொல்லா
ஆடியோ : சரிகம மியூசிக்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
மார்க்கெட்டிங் : ஃபர்ஸ்ட் ஷோ